அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நவீன சுகாதார கழிப்பறை திறப்பு!

சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து, மாணவிகளுக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய சுகாதார கழிப்பறை அமைத்து வழங்கினர். இந்தப் பள்ளியில் 1976ஆம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, மாணவிகளின் சுகாதாரத் தேவையை கருத்தில் கொண்டு தனித்துவமான நவீன கழிப்பறையை அமைத்தனர். இதன் திறப்பு விழாவும், கல்வி வளர்ச்சி நாள் விழாவும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் அருள்மொழி செல்வன் தலைமை தாங்கினார். மகபேறு மருத்துவர் பிருந்தா அருள் மொழிச்செல்வன் கழிப்பறையை மாணவிகளின் பயன்பாட்டு திறந்து வைத்து மாணவ மாணவிகள் சுகாதரத்துடன் இருப்பது குறித்து விளக்கிக் கூறினார். பள்ளித் தலைவர் வி.கே. பாலசுப்பிரமணியம் பள்ளியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பங்களித்து வரும் முன்னாள் மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெருந்தலைவர் காமராஜரின் கல்விப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், பள்ளியில் கல்வி கற்று உயர்ந்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் தங்கள் பள்ளிக்கு வந்து உதவுவது, கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், தற்போதைய மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் முக்கிய பங்காற்றுகிறது என்று பேசினார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அகிலா வரவேற்புரை நிகழ்த்தினார். ஆசிரியர் காந்திமதி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Source link