நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும்; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

சண்டிகர்: “உரிய நேரத்தில் நீதி வழங்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், மாவட்ட அளவில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதிகாரிகள் நியமிப்பதும் மிகவும் அவசியம்,” என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசினார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பொது தலைநகரான சண்டிகரில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உரிய நேரத்தில் நீதி வழங்க வேண்டும். அதற்கு, மாவட்ட அளவில் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை புதுப்பித்து மேம்படுத்த, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், நீதித்துறை அதிகாரிகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

ஆண்டுதோறும் நியமனங்கள் நடந்தாலும், அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை என்பதை அரசு உணர்ந்திருக்கலாம். அதற்கு முக்கியக் காரணம், நாம் நீதித்துறை அதிகாரிகளை நியமித்தால், அவர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு நம்மிடம் உள்ளதா என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். நீதிமன்ற அறைகளே இல்லாதபோது, ஒரு நீதித்துறை அதிகாரியை நியமிப்பதில் என்ன பயன்?

கடந்த சில ஆண்டுகளில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. உதாரணமாக, உச்ச நீதிமன்றத்தில், 2024-ம் ஆண்டு 75,000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதுவே, 2025-ம் ஆண்டில் -83,000 ஆக அதிகரித்தது. இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என கருதுகிறோம். இதைக் கருத்தில் கொண்டு, நான் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தேன். அதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை 34-லிருந்து, 38-ஆக மத்திய அரசு உயர்த்தியது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீதி வழங்க மாவட்ட நீதித்துறையில் பணியிடங்களை அதிகரிப்பது, ஆள்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவது மற்றும் நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவை மிகவும் அவசியம். இதை மாநில அரசுகள் உணர வேண்டும். நம் நாட்டில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக பரவலான கருத்து நிலவுகிறது. நீதித்துறை அதை திறம்படக் கையாள வேண்டும்.

ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படும்போது, அது உடனடியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், நடைமுறை தேவைகள் மற்றும் இயற்கை நீதி சார்ந்த காரணங்களால், அந்த வழக்கை அதே நாளில் தீர்க்க முடியாது.

ஒரு முடிவு எடுக்கும் முன், அறிவிப்புகள் அனுப்புதல், வாதங்களை முழுமையாக்குதல், இரு தரப்பினரும் ஆதாரங்களை சமர்ப்பிக்க அனுமதித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

நடைமுறை தேவையை பொறுத்தவரை, அந்த வழக்குகளை நிலுவையில் உள்ளதாக நான் கருதவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கலாம்; ஆனால் அந்த வழக்கில் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படுவதால், நல்ல காரணத்துக்காகவே நிலுவயில் உள்ளது என்பதை உணர வேண்டும்.

இதுபோன்ற காரணங்கள் இருந்தாலும், நீதிமன்றங்களில் பணிச்சுமையுடன் அதிகமாகவே உள்ளது. அதிலும், மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் அதிகாரிகளும், வலுவான உள்கட்டமைப்பும் அவசியம் தேவைப்படுகிறது.

மற்ற நாடுகளின் நீதித்துறை அமைப்புகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டின் நீதித்துறை தொழில்நுட்ப முன்னேற்றங்களை உகந்த முறையில் பயன்படுத்துகிறது. தொழில்நுட்ப பயன்பாட்டில் முன்னோடியாகவும் நம் நாட்டு நீதித்துறை திகழ்கிறது.இவ்வாறு அவர் பேசினார். பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஜி. மசிஹ், ஷீல் நாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link