நமது நிருபர்
வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்தி போலியான நிதி உதவி திட்ட விளம்பரங்கள் வேகமாக பரவி வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் இதுபோன்ற மோசடிகளில் எளிதில் சிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி இணையதள இணைப்புகள் மூலம் ‘இப்போதே விண்ணப்பியுங்கள்’, ‘ஸ்கிராட்ச் கார்டை தேயுங்கள்’ போன்ற ஆசை வார்த்தைகளை கூறி, பெயர், செல்போன் எண், வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி உள்ளிட்ட ரகசிய தகவல்களை திருட மோசடி கும்பல்கள் முயற்சித்து வருகின்றன.
எனவே, வாட்ஸ்ஆப்பில் வரும் இதுபோன்ற லிங்குகளை திறக்கவோ, பகிரவோ கூடாது என்றும், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை .gov.in அல்லது .nic.in என முடியும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே சரிபார்க்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் எண், ஓடிபி உள்ளிட்ட தகவல்களை அறியாத நபர்களிடமோ, சந்தேகத்திற்கிடமான இணையதளங்களிலோ பதிவிடக் கூடாது என்றும், இலவச பணம், கேஷ்பேக் சலுகை என்ற பெயரில் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
