புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் மறைவுக்கு, இந்தியாவின் கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் (கேரி சோபர்ஸ்) 89. கடந்த 1936ல் (ஜூலை 28) பார்படாசில் பிறந்தார். ‘ஆல்-ரவுண்டரான’ கார்பீல்ட் சோபர்ஸ், 1954ல் கிங்ஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். கடைசியாக, 1974ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய இவர், ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் (1973, எதிர்: இங்கிலாந்து, லீட்ஸ்) பங்கேற்றார். முதல் தர போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடிய இவர், 6 பந்தில், 6 சிக்சர் (1968, எதிர்: கிளாமார்கன்) விளாசிய முதல் வீரரானார். மொத்தம் 93 டெஸ்ட் (8032 ரன், 26 சதம், 235 விக்கெட்), ஒரு ஒருநாள் போட்டியில் (1 விக்கெட்) விளையாடினார்.
வயது மூப்பு காரணமாக கேரி சோபர்ஸ், பார்படாசில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இதனை, அவரது மகன் டேனியல் உறுதி செய்தார். இவரது மறைவுக்கு இந்திய வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
கவாஸ்கர்: காரி சோபர்சின் மறைவு கிரிக்கெட்டின் சோகமான நாள். உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். சோபர்சின் சிறப்பை விவரிக்க வார்த்தைகள் போதாது. இளம் வயதில் எங்களது ‘ஹீரோ’வாக திகழந்தார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.
கபில்தேவ்: கிரிக்கெட் பற்றி தெரிந்தவர்களுக்கு கேரி சோர்பர்ஸ் பற்றியும் நன்கு அறிந்திருப்பர். இப்பூமியில் தோன்றிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் சோபர்சும் ஒருவர். இவர் விளையாடிய விதம் எங்களை போன்றவர்களுக்கு ஊக்கம் அளித்தது. அவர் நம்மிடையே இல்லாதது துயரமான நாள்.
சச்சின்: கேரி சோபர்சின் மறைவை ஏற்றுக்கொள்ளவே மிகவும் கடினமாக உள்ளது. 2003 உலக கோப்பையில் ‘தொடர் நாயகன்’ விருதை எனக்கு வழங்கியது முதல், நான் சதம் அடித்த போது என்னை பாராட்டியது வரை அவருடன் பகிர்ந்து கொண்ட நினைவுகள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.
கோலி: மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரை கிரிக்கெட் இழந்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். உங்களது சாதனை இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும்.
