திருப்பூர்: இந்தியா – பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் (எப்.டி.ஏ.) நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, வரிச்சலுகையுடன் பிரிட்டனுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நடைமுறையை மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக துவங்கி வைத்தது.
இதனால், திருப்பூர் உள்ளிட்ட இந்திய ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு மொத்தம், 1,20,994 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றது. இதில் ஆயத்த ஆடைகள் மட்டும் 13,195 கோடி ரூபாய். இந்த வர்த்தக அளவு, புதிய வரிச்சலுகை அமலுக்கு வந்துள்ளதால் மேலும் அதிகரிக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இந்தியாவில் இருந்து ஆடைகளை ஏற்றுமதி செய்ய, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) வழங்கும் ‘தோற்றுவிப்பு சான்றிதழ்’ அவசியம். இந்த சான்றிதழின் அடிப்படையில் ஏற்றுமதியை சுங்கத்துறை அங்கீகரிக்கிறது. தற்போது வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், மத்திய வர்த்தகத்துறையின் வெளிநாட்டு வர்த்தக இ யக்குநரகம் வழங்கும் ‘முன்னுரிமை வர்த்தக சான்றிதழ்’ வாயிலாக பிரிட்டன் சுங்கத்துறை வரிச்சலுகை வழங்குகிறது.
டில்லி பாரத் மண்டபத்தில், 15-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த புதிய சான்றிதழ் வழங்கும் நடைமுறையை மத்திய அரசு துவங்கி வைத்தது.
இதன் வாயிலாக, ஒப்பந்தத்தின் கீழ் வரிச்சலுகை பெற்று இந்திய ஏற்றுமதியாளர்கள் பிரிட்டன் சந்தையில் போட்டித்திறனுடன் செயல்பட வழி ஏற்பட்டுள்ளது.
