மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான வைகோவின் நாடாளுமன்ற உரைகளை உள்ளடக்கிய (Vaiko in Parliament) என்ற புதிய நூல் வெளியீட்டு விழா தேசிய அளவில் பெரும் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைகோ ஆற்றிய உரைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள், 6 பாகங்கள் கொண்ட ஆங்கில நூல் தொகுப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று ஆவணப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, புது டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியா அரங்கில் ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
தேசிய மற்றும் மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நூலை வெளியிட, தமிழக முதல்வர் விஜய் அதனைப் பெற்றுக் கொள்கிறார். தேசிய அளவில் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதால், இது ஒரு முக்கிய அரசியல் மேடையாகப் பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் சபாநாயகர் ஜெகதீப் தன்கர், சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘Vaiko in Parliament’
Book to be released by #Congress leader Rahul Gandhi in the presence of #TamilNadu Chief Minister C Joseph Vijay in #Delhi on August 4, 2026
Congrats #MDMK general secretary Vaiko @INCIndia #TVKpic.twitter.com/pdpsXJYD3T
— Vijay Kumar S (@vijaythehindu) July 18, 2026
இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் புள்ளியாக மாறியுள்ளது. தவெக கூட்டணியில் விசிக தற்போது நீடித்து வரும் நிலையில், ஆதி திராவிடர் சமூகத்தினரின் வாக்குகள் போதுமான அளவில் விஜய் வசம் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதே வேளையில், தவெக கூட்டணிக்கு வன்னியர் சமூக வாக்குகளும், பாமகவின் 4 எம்எல்ஏக்கள் பலமும் தேவைப்படுவதால், பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர தவெக தரப்பு ஆர்வம் காட்டுவதாகவும், அதற்கு அன்புமணி ராமதாஸும் இணக்கமாக இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், வி.சி.க கூட்டணியில் இருக்கும் வரை பா.ம.கவை உள்ளே கொண்டு வருவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்தச் சூழலில், வைகோவின் புத்தக வெளியீட்டு விழா அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். இதுபோன்ற பொதுவான மேடைகளில் திருமாவளவனும் அன்புமணியும் இணைந்து பங்கேற்கும்போது, அடுத்தடுத்து நிகழும் சந்திப்புகள் இருதரப்புக்கும் இடையே ஒரு இயல்பான சூழலை உருவாக்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக த.வெ.க கூட்டணியில் பா.ம.க இணைவதற்குக் கூட வழிவகை செய்யப்படலாம் என்றும் அரசியல் நோக்கர்களால் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. எவ்வாறாயினும், ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் கூட்டுச் சந்திப்பும், முக்கியத் தலைவர்களின் வருகையும் வரவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் கூட்டணி அரசியல் நகர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
