ஈரான் தாக்குதல்: ஜோர்டானில் அமெரிக்கப் படையினர் 2 பேர் பலி

நமது நிருபர்

ஜோர்டானில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் ஒருவர் மாயம் ஆகி உள்ளார். இது குறித்து அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தாக்குதல்களில் காயமடைந்த நான்கு அமெரிக்கப் படை வீரர்கள் ஜோர்டானில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் குணமடைந்து வீடு திரும்பினர். அதேவேளையில், சிறு காயங்களுக்குச் சிகிச்சை பெற்ற மற்றவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

உயிரிழந்த அமெரிக்க படையினர் இரண்டு பேரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படும் வரை, அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக் ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.

இந்தத் தாக்குதல்கள், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானின் திறனை மேலும் குறைக்கவும், ஜோர்டானில் அமெரிக்கப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரை விரைவாகத் தண்டிக்கவும் நடத்தப்பட்டதாக அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க-ஈரான் மோதல் துவங்கியதில் இருந்து அமெரிக்கப் படை வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 430க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Source link