“மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்”

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (20.07.2026) காலை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த டெல்லியில் இன்று (19.07.2026) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தொகுதி வரையறை எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்து இதுவரை மத்திய அரசு எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அதற்கான வரைவு மசோதா  கூட எங்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த வரைவு மசோதா வெளியாகும் முன்பு எங்களால் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. தொகுதிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அல்லது 50 சதவீதம் அதிகரிக்கப்படும் என்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. ஆனால், மத்திய அரசு இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. எனவே, எங்கள் கட்சியோ  நாங்களோ தற்போது எந்த முடிவையும் எடுத்ததாகக் கூறுவது சரியானதல்ல.

வரைவு மசோதாவின் விவரங்கள் வெளியான பிறகே அதுகுறித்து தெளிவான கருத்தை தெரிவிக்க முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மேகதாது அணை விவகாரத்தை நாளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப உள்ளோம். மாநிலங்களவையில் திருச்சி சிவாவும், மக்களவையில் நானும், திமுக உறுப்பினர்களும் இணைந்து இந்த விவகாரத்தில் குரல் கொடுப்போம். இதற்காக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸை ஏற்கனவே வழங்கியுள்ளோம். நாளையும் இந்த விவகாரத்தை விவாதிக்க அனுமதி கோருவோம். அனுமதி மறுக்கப்பட்டாலும், தொடர்ந்து இந்த பிரச்சினையை எழுப்பி விவாதிக்க வலியுறுத்துவோம்.

இது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினை. எனவே, அவர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். காவிரி நீர் தொடர்பாக நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பிறகும், ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு எடுத்த பிறகும், உரிய அளவு தண்ணீர் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. இந்தச் சூழலில், மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாகவும் தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதையும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த உள்ளோம். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 

திராவிட முன்னேற்றக் கழகம் பெண்கள் இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறது என்பதை இரு அவைகளிலும் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். உயர்கல்வி ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம் தொடர்பான மசோதா தற்போது நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. அதன் வரைவு வெளியான பிறகு, அதில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்து, மக்களின் நலனுக்கு ஏற்ற வகையில் திமுக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

Source link