கொல்கட்டா: கொல்கட்டாவில் நாட்டின் முதல் மொழிகளுக்கான அதிநவீன டிஜிட்டல் அருங்காட்சியகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
கொல்கட்டாவில் உள்ள தேசிய நூலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். அதன்பிறகு, அவர் பேசியதாவது; நாட்டின் கலாசார பாரம்பரியத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கான உறுதிப்பாட்டில் பிரதமர் மோடி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதால், இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். எந்தவொரு நாட்டின் கலாசாரமும், அதன் வெளிப்பாடும் மொழி இல்லாமல் இருக்க முடியாது. நமது எதிர்கால சந்ததியினர் இந்த பயணத்தைப் புரிந்து கொள்ளாதவரை நாட்டின் கலாசாரம் புத்துயிர் பெறாது.
இந்திய உணர்வின் உலகளாவிய கலங்கரை விளக்கமாக மேற்கு வங்கம் திகழ்ந்து வருகிறது. ஒரு காலத்தில் நமது இந்திய கலாசார உணர்வை மேற்கு வங்கத்தில் இருந்து பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறுகிய மற்றும் அந்நிய சித்தாந்தங்களும் மேற்கு வங்கத்தின் திறனை பலவீனப்படுத்தின. பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஆகியோரின் தலைமையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
