நடிகர் மற்றும் முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சென்சார் பிரச்சனைகள் மற்றும் இணையக் கசிவு போன்ற பல்வேறு தடைகளைக் கடந்து இத்திரைப்படம் திரைக்கு வரும் வேளையில், பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், படத்தின் முதல் நாள் முதல் காட்சியைத் (FDFS) தியேட்டரில் காணத் தான் ஏற்கனவே லீவு எடுத்துவிட்டதாகவும், 3 மணி நேரம் மட்டும் பழைய ரசிகராகச் செயல்பட அனுமதி தருமாறும் அமைச்சர் விக்னேஷ் முதல்வரிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு சென்சார் சிக்கல்கள் மற்றும் இணையக் கசிவு போன்ற சவால்களைக் கடந்து, அனைத்துத் தயாரிப்புகளுடன் ஜூலை 23 அன்று திரைக்கு வரவுள்ளது ‘ஜனநாயகன்’ திரைப்படம். இப்படம் வெளியாகும் நேரத்தில் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் விக்னேஷ், “முதல்வர் பொறுப்பாக இருக்கச் சொல்லியுள்ளார், ஆனால் படம் வெளியாகும் அந்த 3 மணி நேரம் மட்டும் எங்களைப் பழைய ரசிகராகச் செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுள்ளோம். முதல்வர் இன்னும் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால், நான் படத்தைப் பார்ப்பதற்காக ஏற்கனவே விடுப்பு எடுத்துவிட்டேன். இனி வரும் வாழ்க்கையில் எப்போது இதுபோல அதிகாலை 4 மணி முதல் நாள் முதல் காட்சி அமையப்போகிறது என்று தெரியவில்லை. எனவே, நான் வழக்கமாகப் பார்க்கும் தியேட்டரில் ‘ஜனநாயகன்’ படம் பார்க்க ஆசையாக உள்ளது, முதல்வர் அந்த 3 மணி நேரம் மட்டும் அனுமதி தர வேண்டும்” எனப் பேட்டியின் வாயிலாகக் கோரிக்கை வைத்துள்ளார்.
“காமராஜர் வழியில் விஜய்”
இதற்கிடையில், கோவையில் வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விக்னேஷ் பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பேசினார். தமிழகத்தில் எந்தவொரு புதிய கட்சி தொடங்கினாலும் பெருந்தலைவர் காமராஜரைத் தவிர்க்க முடியாது என்றும், மக்கள் நலன் காக்க அவரது ஆட்சிமுறை மிகவும் அவசியமானது என்றும் குறிப்பிட்டார். அதனால்தான் முதல்வர் விஜய், காமராஜரைத் தனது கொள்கைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று சுட்டிக்காட்டிய அவர், காமராஜரின் புகழைச் சொல்லியே தமிழகத்தில் அனைவரும் ஆட்சிக்கு வர முடியும் என்றும், அவரது கொள்கைகளைப் பின்பற்றி மாணவர்களுக்கும் மக்களுக்கும் தங்களது அரசு நிச்சயமாக நல்லாட்சி வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றங்கள், சீர்திருத்தங்கள்!
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் நிர்வாகத்தில் கொண்டு வரப்படும் அதிரடி மாற்றங்கள் குறித்து விளக்கினார். மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவது இந்த அரசின் நோக்கமல்ல என்று தெளிவுபடுத்திய அவர், கடந்த காலங்களில் நடந்த தவறுகளைத் தற்போது சரிசெய்து வருவதாகக் கூறினார். மேலும், டாஸ்மாக்கை தனியாருக்கு மாற்றும் எண்ணம் அரசிடம் எள்ளளவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். கடைகளில் மது பாட்டில்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட முறேகடுகளைத் தடுக்கச் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், துறை சார்ந்த கூடுதல் சீர்திருத்தங்கள் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் தனது பேட்டியில் தெரிவித்தார்.
