கடலூர் மாவட்டம் முழுவதும் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று (19-07-26) ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் செயல்படும் நேரடி கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது விவசாயிகள் எவ்வளவு பேர் நெல்லை விற்பனை செய்கிறார்கள் என்ற பட்டியலை பார்த்து அந்த பட்டியலில் இருந்து ஒரு விவசாயிக்கு நேரடியாக செல்போன் மூலமாக தொடர்பு கொண்டார்.
அப்போது அந்த விவசாயிடம், உங்களுக்கு இங்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா? நெல் விற்பனை செய்வதற்கு ஏதேனும் லஞ்சம் கேட்கப்பட்டதா? என்றெல்லாம் அமைச்சர் வெங்கடரமணன் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு அந்த விவசாயி, ஒரு மூட்டையை கொள்முதல் செய்ய ரூ.50 லஞ்சம் வாங்குவதாக புகார் அளித்தார். இதனை கேட்ட அமைச்சர் வெங்கடரமணனும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து உடனடியாக அந்த கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் வேல்முருகன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் வெங்கடரமணன் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பட்டியல் எழுத்தர் வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கடலூர் மாவட்டம் மட்டுமல்லாம் தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இது மாதிரியான லஞ்சப் பிரச்சனை இருப்பதாக புகார் எழுந்திருந்த நிலையில், இன்று அமைச்சர் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்துள்ளார்.
