ரோகித் சர்மா சதம் வீண்; இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து

லார்ட்ஸ்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசிய போதும், கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 27 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதுடன், தொடரையும் இழந்தது.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் 3வது, கடைசி போட்டி நடந்தது. இந்திய ‘லெவன்’ அணியில் முழுங்கால் காயத்தால் பும்ரா இடம் பெறவில்லை. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

டக்கெட் சதம்

இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட், ஜேக்கப் பெத்தல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பெத்தல் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 192 ரன் சேர்த்த போது பிரசித் கிருஷ்ணா ‘வேகத்தில்’ பெத்தல் (91 ரன், 2X6, 11X4) வெளியேறினார். பின் இணைந்த டக்கெட், ஜோ ரூட் ஜோடி நம்பிக்கை தந்தது. அர்ஷ்தீப் வீசிய 32வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த டக்கெட், குர்னுார் பிரார் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் விளாசினார். தொடர்ந்து அசத்திய டக்கெட், குர்னுார் பிரார் வீசிய 38வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்த போது பிரின்ஸ் யாதவ் பந்தில் டக்கெட் (141 ரன், 1X6, 18X4) ஆட்டமிழந்தார்.

ரூட் அரைசதம்

மறுமுனையில் அபாரமாக ஆடிய ஜோ ரூட், 39 பந்தில் அரைசதம் விளாசினார். கேப்டன் ஹாரி புரூக் (14) நிலைக்கவில்லை. குர்னுார் பிரார் வீசிய 48வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விரட்டிய பட்லர், பிரசித் கிருஷ்ணா வீசிய 49வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். பிரின்ஸ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் ஜோ ரூட் 2, பட்லர் ஒரு பவுண்டரி அடித்தனர்.

இங்கிலாந்து அணி 50 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 387 ரன் எடுத்தது. ஜோ ரூட் (74 ரன், 9X4), பட்லர் (41 ரன், 13 பந்து, 3X6, 4X4) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் கைப்பற்றினார்.

ரோகித் விளாசல்

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. ஜோஷ் டங் வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ரோகித், சாம் கர்ரான் வீசிய 11வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். அடில் ரஷித் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சுப்மன் கில், அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 147 ரன் சேர்த்த போது அடில் ரஷித் ‘சுழலில்’ சுப்மன் கில் (77) சிக்கினார். ஜோஷ் டங் வீசிய 29வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட ரோகித், அடில் ரஷித் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஒருநாள் அரங்கில் தனது 34வது சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி 38 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 260 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ரோகித்- விராத் கூட்டணி வெற்றியை வசமாக்கும் என அனைவரும் நினைத்த நிலையில், ரோகித் (138) அவுட்டானார். விராத் கோலி (74) அரைசதம் அடித்த நிலையில், பெவிலியன் திரும்பினார். இஷான் கிசன்(14), ஷ்ரேயஸ் ஐயர்(0), கே.எல்.ராகுல்(12), அக்சர் படேல்(2) வரிசையாக நடையை கட்ட, இந்திய அணியின் தோல்வி உறுதியானது.

50 ஓவர் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் மட்டுமே எடுத்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இங்கிலாந்து அணி கைபற்றியது.

Source link