பார்லியை நோக்கி பேரணி நடத்த முயற்சி; டில்லியில் சிஜேபி இயக்கத்தினர் கைது

புதுடில்லி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ இயக்கத்தினர் பார்லியை நோக்கி முற்றுகையிட முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், 21 நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பார்லியை முற்றுகையிடும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், எந்தப் பேரணிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், டில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் மற்றும் ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், போலீசாரின் தடையை மீறி ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ இயக்கத்தினர் பார்லியை நோக்கி முற்றுகையிடும் பேரணிக்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். ஜந்தர் மந்தர் பகுதியின் நாலாபுறமும் தடுப்புகளை அமைத்து அவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் தடையை மீறிச் செல்ல முயன்றனர். இதனால், அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். சிலர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக டில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இன்று பார்லி மழைக்கால கூட்டத் தொடர் கூடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், 5 மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

Source link