ரூ.10 கோடி பம்பர் லாட்டரி: 3 நாட்களாகியும் நீடிக்கும் மர்மம்

கேரளாவில் ஜூலை 18 நடைபெற்ற மான்சூன் பம்பர் லாட்டரி குலுக்கலில், முதல் பரிசான 10 கோடி ரூபாயை வென்ற நபர் யார் என்ற கேள்வி தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குலுக்கல் முடிந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், இதுவரை யாரும் இந்த பிரம்மாண்ட பரிசுத்தொகைக்கான உரிமையைக் கோர முன்வரவில்லை.

இந்த மான்சூன் பம்பர் லாட்டரியில் ‘MC 576896’ என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. வழக்கமாக கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு லாட்டரி அடித்தால், குலுக்கல் நடைபெற்ற அன்றைய தினமே வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். ஆனால், இம்முறை இரண்டு, மூன்று நாட்களாகியும் வெற்றியாளர் யார் என்று தெரியாததால், இந்த அதிர்ஷ்டம் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைத்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கேரள லாட்டரி பிரியர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்த முதல் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டானது கண்ணூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ‘ஸ்ரீ காவேரி’ என்ற லாட்டரி ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கண்ணூர் மாவட்டம் கேரளாவின் உள் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு சுற்றுலாப் பயணிகளும், புலம் பெயர் தொழிலாளர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் இந்த டிக்கெட் வாங்கப்பட்டிருப்பதால், தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கேனும் இந்த ரூ.10 கோடி பரிசு அடித்திருக்க வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.

இதுகுறித்து அந்த லாட்டரி கடையின் உரிமையாளர் கூறுகையில், “எங்களது ஏஜென்சியில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே இந்த பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வந்த நிலையில், பரிசு விழுந்த இந்த குறிப்பிட்ட டிக்கெட் 12 நாட்களுக்கு முன்புதான் விற்பனையானது. ஆனால், அதை யார் வாங்கினார்கள் என்பது தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை தினம் என்பதால், அதிர்ஷ்டசாலி நபர் இன்று அல்லது நாளை வங்கி மூலமாகவோ அல்லது நேரடியாக லாட்டரி அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பரிசுத்தொகையைத் கோரலாம் என கேரள லாட்டரி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், லாட்டரி வெல்லும் சிலர் தங்களது அடையாளத்தை வெளியில் காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள் என்பதால், ரகசியமான முறையில் பரிசுத்தொகையைப் பெறவும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ.250 விலைகொண்ட இந்த மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசுத்தொகை 10 கோடி ரூபாய் என்றாலும், பரிசு வென்ற நபரின் கைக்கு முழுத் தொகையும் கிடைக்காது. முகவர்களுக்கான கமிஷன் மற்றும் அரசுக்கான வரி பிடித்தங்கள் போக, அதிர்ஷ்டசாலியின் கைகளுக்குச் சுமார் 6.20 கோடி ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link