பாலிவுட்டில் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ராமயணா’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் உருவாகிறது. இதில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் லக்ஷ்மன் கதாபாத்திரத்தில் ரவி துபேவும் அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர்களாக ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இசையமைக்கின்றனர். ஸ்ரீதர் ராகவன் எழுதுகிறார். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
முதல் பாகம் இந்தாண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு வெளியான படத்தின் அறிவிப்பு முன்னோட்டமும் அடுத்து வெளியான ராமர் கதாபாத்திர அறிமுக வீடியோவும் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த சூழலில் படக்குழு டெல்லியில் ‘பிரதம் சங்கல்ப்’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடத்தியது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு செய்தியாளர்கள் முன்னிலையில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் சாய் பல்லவி பேசியதாவது, “நடிகர்களுக்கு இது போன்ற கதாபாத்திரங்கள் கிடைப்பது எளிதல்ல. ஏனென்றால், ஒரு தெய்வத்தின் வேடத்தில் நடிப்பது சவாலான விஷயம். உலகிற்கு மிகச்சிறந்த ஒரு படைப்பை வழங்க வேண்டும் என்பதற்காகத் தங்களின் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுத்து உழைக்கும் ஒரு குழு அமைவது வரம். ஏனெனில், இந்தத் திரைப்படம் எதிர்காலத் தலைமுறையினர் திரும்பிப் பார்க்கும் ஒரு வரலாறாக மாறப்போகிறது. அப்படிப்பட்ட உன்னதமான படத்தில் என்னைச் சேர்த்ததற்காகத் தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா மற்றும் இயக்குனர் நிதேஷ் திவாரிக்கு என் நன்றிகள்.
சீதா கதாபாத்திரத்தை நான் தேர்ந்தெடுத்ததாக நினைக்கவில்லை. அது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்த வேடத்தை தேடிச் சென்று அடையவோ அல்லது ‘இப்படித்தான் நடிக்க வேண்டும்’ என்று முன்கூட்டியே திட்டமிடவோ முடியாது. நான் தியானம் செய்து, ‘சீதா தேவி, என் வழியாக நீங்களே செயல்படுங்கள், என் மூலம் வெளிப்படும் அனைத்தும் இந்தப் படத்திற்கு நீங்கள் விரும்புவதாகவே இருக்கட்டும்’ என்று வேண்டிக்கொள்வேன். என் எண்ணங்களிலாவது நான் முடிந்தவரை தூய்மையாகவும் நடுநிலையாகவும் இருக்க முயன்றேன். அப்போதுதான் என்னால் அந்தப் பாத்திரத்திற்கு எனது சிறந்த பங்களிப்பை கொடுக்க முடியும்” என்றார்.
