1994-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான அனுராக் தன்கரை மீட்டெடுக்க மருத்துவர்கள் முயன்ற போதிலும், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே மரணத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திரிபுரா டி.ஜி.பி அனுராக் தன்கர், அகர்தலாவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
திரிபுரா மாநில காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) அனுராக் தன்கர், அகர்தலாவில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் “மிகவும் ஆபத்தான நிலையில்” கண்டெடுக்கப்பட்டு, உடனடியாக கோவிந்த் பல்லப் பந்த் (ஜி.பி.பி) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; அங்கு அவர் “கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டார்” என அறிவிக்கப்பட்டார். அவருக்கு வயது 60. ஜிபிபி மருத்துவமனையின் பொது மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் பிரதீப் பவ்மிக் கூறுகையில், தன்கர் மதியம் 12 மணியளவில் இந்த மருத்துவ நிறுவனத்திற்குக் கொண்டு வரப்பட்டார் என்றார்.
“அவர் இங்கு கொண்டு வரப்பட்டபோது, நாடித் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாசத் துடிப்பு போன்ற முக்கிய அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும் சிபிஆர் (இதய நுரையீரல் புத்துயிரூட்டல்) சிகிச்சை அளித்து அவரை மீட்க நாங்கள் முயன்றோம். எங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பிறகும் எவ்வித உயிர் அடையாளமும் தெரியாததால், மதியம் 12.48 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக நாங்கள் அறிவித்தோம்,” என்று டாக்டர் பவ்மிக் கூறினார்.
