இங்கிலாந்து சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இத்தொடரில், இந்திய அணியால், 2ஆவது போட்டியில் மட்டுமே வெல்ல முடிந்தது, 1, 3 ஆகிய போட்டிகளில் வென்று, இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
தோனி வருகை: இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியையும், மூன்றாவது போட்டியையும் தோனி கண்டுகளித்தார். இந்நிலையில், தோனியை பிசிசிஐதான் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒருநாள் தொடரில், இளம் வீரர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது, பிட்ச் ரிப்போர்ட்டிற்கு ஏற்ப, பிளேயிங் 11 தேர்வு இருக்கிறதா என்பது குறித்து, பிசிசிஐக்கு அறிக்கை அளிக்கதான், தோனி இங்கிலாந்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
தோனி அறிக்கை: இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து தோனி அறிக்கை சமர்பித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், இந்திய அணி ஆல்ரவுண்டர்கள் செயல்பாடு, வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு, திருப்திகரமாக இல்லை என தோனி அறிக்கை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விக்கெட் கீப்பர் இடத்தை இஷான் கிஷனிடம் இருந்து, மீண்டும் கே.எல்.ராகுலுக்கு கொடுக்க வேண்டும் என தோனி பரிந்துரை செய்துள்ளாராம்.
பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும்: தற்போது, தோனி சமர்பித்துள்ள இந்த அறிக்கையை வைத்து, பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தோனியின் அறிக்கையை தீவிரமாக பரிசீலிக்க உள்ளார்களாம்.
என்ன காரணம்? ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க காலநிலையும், பிட்சும், இங்கிலாந்து காலநிலை, பிட்சும் கிட்டதட்ட ஒரே மாதிரியாகதான் இருக்கும். இதனால்தான், இங்கிலாந்து ஒருநாள் தொடரை, பிசிசிஐ தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக, விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ஆட்டம் குறித்தும் தோனியிடம் அறிக்கை கேட்டார்களாம். தோனியும், பேட்டிங்கில் எந்த பிரச்சினையும் இல்லை, ஆல்ரவுண்டர், பௌலர்கள் இடத்தில்தான் பிரச்சினை இருக்கிறது என தோனி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அணித் தேர்வில் மாற்றம்: இனி, இந்திய அணியின் மூன்று பார்மெட்டிற்கான அணிகளையும் தேர்வு செய்யும்போது, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன்கள் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் ஆலோசனை மட்டுமே கேட்கப்படும். இவர்களும், பரிந்துரைகளை மட்டுமே செய்ய முடியும். இனி, இறுதி முடிவுகளை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே எடுப்பார்கள்.
அதாவது, ரவீந்திர ஜடேஜா வேண்டாம் என கம்பீரோ, ஷுப்மன் கில்லோ தெரிவித்தால், ஜடேஜா ஏன் வேண்டாம், அவருக்கான மாற்று வீரர் யார் என்பதை, இவர்கள் விளக்க வேண்டும். இந்த விளக்கம் போதுமானதாக இருந்தால், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், இந்த முடிவை ஏற்றுக் கொள்ளலாம். ஒருவேளை, இந்த முடிவு, அகார்கருக்கு பிடிக்கவில்லை என்றால், ஜடேஜாவை ரெகுலராக அணியில் சேர்க்கலாம்.
சமீப காலமாகவே இந்திய ஒருநாள், டெஸ்ட், டி20 அணிகள் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது. இதனால்தான், இனி அணித் தேர்வில் கடுமை காட்ட பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால்தான், மகேந்திரசிங் தோனியை, இங்கிலாந்து அணி, ஒருநாள் அணியின் செயல்பாடு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
