வெற்றியடையும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்? பதவி விலகும் தர்மேந்திர பிரதான்?

நாடாளுமன்ற கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் அமளி; கரப்பான்பூச்சி கட்சியினரின் பேரணி, போலீசாரின் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு உள்ளிட்ட சலசலப்புகளுக்கு மத்தியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்தார்.

சுமார் 4 மணிநேரத்திற்கு அதிகமாக நடைபெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் பதவி விலகுகிறாரா என்ற கேள்வி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

நீட் குளறுபடி உள்ளிட்ட கல்வித்துறையில் நிகழ்ந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என ஜூன்.20 முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறது.

இதில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைய போராட்டம் மேலும் கவனம் ஈர்த்தது. அதிலும் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். டெல்லியை உலுக்கிய இந்த தொடர் போராட்டத்தின் விளைவாக, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதில் அவர்கள் மூன்று கோரிக்கைகளை நட்டாவிடம் வைத்துள்ளனர். தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும், நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், கல்வித்துறையில் சீர்த்திருத்தங்களை கொண்டுவருவது என மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே அமித்ஷாவும் பதவி விலகல் விவகாரம் தொடர்பாகவே பிரதானை அழைத்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர் பதவி விலகல் உறுதியாகிறதா என்ற கேள்விகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

Source link