கொழும்பு: இரண்டாவது ‘யூத்’ டெஸ்டில் இந்தியாவின் குஷாக்ரா ஓஜா சதம் விளாசினார்.
இலங்கை சென்றுள்ள இளம் இந்திய அணி (19 வயது), இரண்டு போட்டிகள் கொண்ட ‘யூத்’ டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் போட்டி ‘டிரா’ ஆனது. நேற்று, கொழும்புவில் 2வது டெஸ்ட் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு லக்சயா ராய்சந்தனி (0), சாகர் விர்க் (0) மோசமான துவக்கம் கொடுத்தனர். பின் இணைந்த குஷாக்ரா ஓஜா, கேப்டன் யாஷ்பர்தன் சவுகான் ஜோடி நம்பிக்கை தந்தது. யாஷ்பர்தன் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த போது யாஷ்பர்தன் (78 ரன், 2X6, 11X4) அவுட்டானார்.
மறுமுனையில் அசத்திய குஷாக்ரா சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மனால் சவுகான் அரைசதம் அடித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 253/3 ரன் எடுத்திருந்தது. குஷாக்ரா (103), மானல் (55) அவுட்டாகாமல் இருந்தனர்.
