புதுடில்லி: இந்தியா சூப்பர் பவர் நாடாக உருவாகி வருகிறது. ஐநா சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி தர வேண்டும் என பனாமா நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜேவியர் எடுரோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இன்றைய உலகம் 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலையை பிரதிபலிக்கவில்லை. இந்தியா சூப்பர் பவர் நாடாக உருவாகி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக உள்ளது. இன்றைய நிஜ உலகை பிரதிபலிக்கும் வகையில், சர்வதேச அமைப்பை விரிவுபடுத்த வேண்டும். ஐநா பாதுகாப்பு சபையில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு நாங்கள் வலுவான ஆதரவு தெரிவிக்கிறோம்.
ஐநா பாதுகாப்பு சபையில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கும் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இதன் வாயிலாக பல்வேறு வகையிலான சர்வதேச பிரச்னைகள் குறித்து இன்னும் ஆக்கப்பூர்வமான முறையில் சமமான பேச்சுவார்த்தை நடக்கும். இவ்வாறு ஜேவியர் எடுரோ கூறினார்.
