பழநி கோவில் மடம் நில மோசடி விவகாரம்: சார்-பதிவாளர் ஜஸ்டின் மீது கடந்த ஆண்டே வழக்கு பதிவு!

தேனி: பழநி கோவில் மடம் நில மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள சார் – பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது கடந்த ஆண்டே, வேறு ஒரு பத்திரப்பதிவு விவகாரத்தில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, மேல்மங்கலத்தை சேர்ந்தவர் விஜய்பாலா. சென்னையில் ஆட்டோமொபைல் தொழில் செய்கிறார். இவர்களுக்கு சொந்தமான, 1.08 ஏக்கர் நிலம், இவரது அத்தை சுப்புலட்சுமியின் 99 சென்ட் நிலம் மற்றும் ஏழு பிளாட்கள் மேல்மங்கலத்தில் இருந்தன. நிலத்தை மேல்மங்கலத்தை சேர்ந்த கட்டதேவன் பராமரித்தார்.

விஜய்பாலா சொத்துக்களை விற்பனை செய்ய வில்லங்க சான்றிதழ் பார்த்த போது, கட்டதேவன், விஜய்பாலாவின் உறவினர் ரவிசங்கர் இணைந்து, விஜய் பாலா, சுப்புலட்சுமி என வேறு நபர்களை ஆள்மாறாட்டம் செய்து பத்திரபதிவு செய்து, நிலங்களை விற்றது தெரிந்தது.

2025 மார்ச்சில், தேனி எஸ்.பி.,யிடம் விஜய்பாலா புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். பின்னர், கட்டதேவன், குருசாமி, ரவிசங்கர், ஈஸ்வரன், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.எஸ்.ஐ., அமாவாசி, எஸ்.ஐ., பாண்டியராஜன், பெரியகுளம் சார் – பதிவாளர்கள் ஜஸ்டின் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், பத்திர எழுத்தாளர்கள் அசோகன், அறிவழகன் உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதில், கட்டதேவன், குருசாமி, ஈஸ்வரன், ரவிசங்கர் ஆகியோரை கடந்தாண்டு போலீசார் கைது செய்தனர். பத்திர எழுத்தர்கள் பெரியகுளம் வடகரை கோட்டைமேடு அசோகன், 69, வி.ஆர்.வி., நாயுடு தெரு அறிவழகன், 59 ஆகியோரை கைது செய்தனர்.

பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஜஸ்டின் மணிகண்டன் மீது இந்த நில மோசடியில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படி இருந்தும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, பழநி கோவில் நிலத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார்.

Source link