தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181-1ன் கீழ், 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி புதன்கிழமை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் நாள் குறித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து செய்தியாளர்கள், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா எனக் கேட்டபோது, “ஆம். அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்,” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் தனியாக நடைபெறுமா அல்லது பட்ஜெட் விவாதத்துடன் சேர்ந்து நடைபெறுமா என்ற கேள்விக்கு, “விவாதங்கள் அனைத்தும் வழக்கம்போல ஒன்றாகவே நடைபெறும். மானியக் கோரிக்கைகளும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்படும். 

சட்டப்பேரவையில் இதுவரை பின்பற்றப்பட்ட நடைமுறைகளே இந்த முறையும் தொடரும்,” என்றார். திருத்திய நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், “பொதுமக்கள், வாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் வியந்து பாராட்டும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார். சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படுமா என்ற கேள்விக்கு, “முன்புபோல் முழு நேரலையும் தொடர வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்த உள்ளோம்” என்று கூறினார்.

Source link