‘கற்றது தமிழ்’, ’தங்கமீன்கள்’, ’பேரன்பு’, ’பறந்து போ’ உள்ளிட்ட சிறப்பு மிக்க படங்களை இயக்கி புகழ் பெற்றவர் ராம். இவரது ஒவ்வொரு திரைப்படமும் யதார்த்த மனிதர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கும். இந்நிலையில், அவரது படைப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் ’ஏழு கடல் ஏழு மலை’.
நிவின் பாலி மற்றும் அஞ்சலி இணைந்து நடிக்கும் இப்படத்தில், சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சியின் ’வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஏகாம்பரம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம், இதுவரை பல சர்வதேச விருதுகளையும் வென்றதுடன், சர்வதேச அளவில் வெகுவாக பாராட்டையும் பெற்றுள்ளது. குறிப்பாக, 46 வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஏழு கடல் ஏழு மலை படம் திரையிடப்பட்டது. அதே போல, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. மேலும், ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது. இவ்வாறு உலக அளவில் கவனம் பெற்ற படமாக இது அமைந்துள்ளது.
முன்னதாக, இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நாள் அன்று இப்படம் வெளியாக உள்ளது.
