புதுச்சேரி மனக்குள விநாயகர் கோவில் வீதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புதுச்சேரி பத்திரிகையாளர்கள் மன்றம் (Press Club) அமைந்திருக்கும் கட்டிடத்தில், ராஜ்பவன் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என ராஜ்பவன் தொகுதி திமுக எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“புதுச்சேரியில் சட்டமன்றம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பத்திரிகையாளர்கள் மன்றமும் செயல்பட்டு வருகிறது. ஊடகவியலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்யவும், அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய அமைப்பாகவும் இந்த மன்றம் திகழ்கிறது.
சில காரணங்களால் அரசின் ஒத்துழைப்பு இன்றி தற்காலிகமாக இது செயல்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதனை திமுக சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகமாக மாற்ற முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் உதாசீனப்படுத்துவதும், அவர்களின் குரல்வளையை நெறிப்பதும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்பவன் தொகுதி திமுக எம்.எல்.ஏ விக்னேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்:
”தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிய அலுவலகம் தேவைப்பட்டதால், புதுச்சேரி நகராட்சிக்குச் சொந்தமான கட்டிடங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படாமல் இருந்த இந்த நகராட்சிக் கட்டிடம் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் இருந்ததால், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் மூலம் நகராட்சி ஆணையருக்கு முறையான கோரிக்கை அனுப்பப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்கும், நிர்வாக நடைமுறைகளுக்கும் உட்பட்டே முழு வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட்டுள்ளன.
மறைந்த மக்கள் தலைவர் ப.கண்ணன் அமைச்சராகவும், பேரவைத் தலைவராகவும் இருந்தபோது பத்திரிகையாளர்களுக்கு அளித்த மரியாதையையும், பாதுகாப்பையும் அவரது மகனான தானும் என்றும் தொடர்வேன்” என உறுதியளித்துள்ளார்.
(செய்தி: பாபு ராஜேந்திரன்)
