Kajal Aggarwal: “தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" – நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

பாலிவுட்டில் ‘சிங்கம்’, ‘தோ லஃப்சோன் கி கஹானி’ போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும், சமீபகாலமாக அவர் தென்னிந்திய படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடம், `இந்திப் படங்களை ஏன் இவ்வளவு கவனமாகத் தேர்ந்தெடுக்கிறீர்?, தென்னிந்திய சினிமாவிடம் பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்ன?, திரைத்துறையில் பெண்களைச் சித்தரிக்கும் விதம் எவ்வாறு மாறியுள்ளது?’ என்பன குறித்து கேட்கப்பட்டது.

நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால்

அதற்கு பதிலளித்த நடிகை காஜல் அகர்வால், “எனக்கு எப்போதும் வேலையின் தரம்தான் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் எனக்குக் கிடைத்த தரமான கதாபாத்திரங்கள் பாலிவுட்டில் கிடைக்கவில்லை. எண்ணிக்கையை விட தரத்திற்கே நான் முன்னுரிமை கொடுத்தேன்.

தென்னிந்திய சினிமா அத்தகைய வாய்ப்புகளை எனக்குத் தாராளமாக வழங்கியபோது, நான் ஏன் பாலிவுட்டில் சாதாரணமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்?” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், “திரைப்படங்களில் மொழியை நான் என்றுமே ஒரு தடையாகப் பார்த்ததில்லை. எனக்குத் தேவை அர்த்தமுள்ள கதைகள் மட்டுமே. நடிப்புத் துறையின் மீது காதல் வர எனக்கு ஏழு படங்கள் தேவைப்பட்டன. ஆனால், ஒருமுறை நடிப்பை நேசிக்கத் தொடங்கியதும், முழு அர்ப்பணிப்போடு அதில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன்.

பாலிவுட் தென்னிந்திய சினிமாவிடம் இருந்து ‘நேரம் தவறாமையை’ கற்றுக்கொள்ள வேண்டும். இந்திப் படங்களில் எதுவும் சரியான நேரத்திற்கு நடப்பதில்லை. ஆனால் தென்னிந்தியாவில், கடிகார நேரத்திற்கு ஏற்பக் கட்டுப்பாட்டுடன் வேலை செய்கிறார்கள். நான் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று பழகியவள், அந்த ஒழுக்கமே எனக்குப் பிடிக்கும்.

நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால்

நடிகர் சல்மான் கான் தான் என்னை மிகவும் நீண்ட நேரம் காத்திருக்க வைத்தார். அவர் மதியமோ அல்லது மாலையிலோதான் படப்பிடிப்புத் தளத்திற்கு வருவார். அது எனக்கு பழகாத ஒன்று. எனக்கு அதிக நேரம் கிடைத்ததால், படப்பிடிப்புத் தளத்திலேயே இருந்த உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று விடுவேன். தென்னிந்திய சினிமாவின் நேரக் கட்டுப்பாட்டிற்கு நான் அவ்வளவு தூரம் பழகியிருந்தேன். தென்னிந்திய சினிமாவில் பெண்களைச் சித்தரிக்கும் விதம் மாறியுள்ளது.

தற்போது பெண்களுக்கு வலிமையான மற்றும் சுதந்திரமான கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன. பெண்களின் இடுப்பை மட்டுமே மையமாகக் காட்டும் நிலை இப்போது மாறிவிட்டது. நான் எப்போதும் அத்தகைய காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக எல்லை வகுத்திருந்தேன்” என்றார்.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழும் காஜல் அகர்வால், தொடர்ந்து பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்திலும், நிதேஷ் திவாரியின் ‘ராமாயணம்’ படத்தில் ‘மண்டோதரி’ கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

Source link