‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்திற்கு பிறகு கோபிசந்த் மலினேனி மற்றும் பாலகிருஷ்ணா இணைந்துள்ள படம் ‘என்.பி.கே. 111’. தற்காலிகமாக இந்த தலைப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் மஞ்சு மனோஜ், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விரிதி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வந்துள்ள நிலையில் அதில் பாலகிருஷ்ணாவுக்கு தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு தரப்பு கூறுகையில், “காக்கிநாடாவில் என்.பி.கே. 111 திரைப்படத்தின் தீவிரமான சண்டைக் காட்சி படமாக்கப்படும்போது, ​​நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு தசைநார் பகுதியில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.
விரைவாகவும் முழுமையாகவும் குணமடைவதை உறுதிசெய்ய, மருத்துவக் குழுவின் அறிவுறுத்தலின்படி அவர் ஒரு சிறிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளார். திரைப்படத்தின் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வம் ஆகியவை படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன.
இது ஒரு வழக்கமான மருத்துவ நடைமுறைதான். எனவே கவலைப்படத் தேவையில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், மீண்டும் படப்பிடிப்புத் தளத்திற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
