சென்னை: காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் பணிக்காலத்தை நீட்டித்து ஊதிய நிலுவையை விடுவிக்க வேண்டும் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை;
புதுக்கோட்டை மாவட்டம், காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தின் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளைச் சேர்ந்த பணியாளர்களின் பணிக்காலம் 2025ம் ஆண்டு டிச.31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2026ம் ஆண்டு ஜன.1 முதல் 2027ம் ஆண்டு டிச.31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு ஏற்கனவே 2026ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
பணிக்கால நீட்டிப்புக்கான அரசாணை இதுவரை வழங்கப்படாததால், பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான ஊதியம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு, ஏப்ரல், மே, ஜூன் 2026 ஆகிய 3 மாதங்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகளுக்குத் தேவையான ரூ.66.52 லட்சம் நிதியை விடுவிக்க ஏற்கனவே 2026ம் ஆண்டு மே 12ம் தேதி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரையிலும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் குடும்பங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, கால தாமதமின்றி அவர்கள் பணிக்காலத்தை 2027ம் ஆண்டு டிச.31 வரை நீட்டித்து அரசாணை வெளியிடுவதுடன், நிலுவையில் உள்ள ஏப்ரல், மே, ஜூன் மாதங்களின் ஊதியத்திற்கான நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
