கோவை: ”கடந்த ஆட்சியில், டாஸ்மாக் கடைகளில், 10 ரூபாய் கூடுதல் வசூல் தொடர்பான விபரம் விரைவில் வெளிவரும்,” என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், மாநிலம் முழுதும் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. இதுவரை, 3,579 கிலோ கஞ்சா, 27 கிலோ பிற போதைப்பொருட்கள், ஒரு லட்சம் போதை மாத்திரைகள், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
த.வெ.க., அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 2,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,845 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில், 10 ரூபாய் கூடுதல் வசூல் பல இடங்களில் குறைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண, ஜூலை 27க்கு பின், கூடுதல் நடவடிக்கை அறிவிக்கப்படும். கடந்த ஆட்சியில், ‘பார்ட்டி பண்ட்’ என்ற பெயரில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததை போலவே, 10 ரூபாய் கூடுதல் வசூல் தொடர்பான விபரங்களும் விரைவில் வெளிவரும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு, நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் செயல்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில், ‘ரெஸ்ட்ரோ பார்’ தொடர்பான தகவல் வெளியாகி, டாஸ்மாக்கை தனியார்மயமாக்க போவதாக வதந்தி பரவி வருகிறது. மது கொள்முதலில் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்.
கோவை வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணிகள் விரைவில் தொடங்கும். வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னைக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
