திருப்பூர்: ”சனாதன தர்மம் சொல்லக்கூடிய சாஸ்திரங்கள் அனைத்தும் உயர்வான, வழக்கத்தில் உள்ளவை. வளர்ச்சி என்பது வெறும் கட்டடம் இல்லை. அது, மனதளவிலான வளர்ச்சி,” என, ஸ்ரீவிஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்கினார்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின், 70வது பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், திருப்பூருக்கு விஜயம் செய்துள்ளார். வாய்க்கால் தோட்டத்திலுள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் நேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களிலிருந்தும் பிரசாதம் அவருக்கு வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு சுவாமிகள் வழங்கிய அருளுரை:
மனித தர்மம் குறித்து பல்வேறு மதங்களும் சொல்லியிருக்கின்றன. சனாதன தர்மம் எல்லா தர்மங்களிலும் உயர்வான தர்மம். இதில் சொல்லப்பட்டிருக்கும் தர்மங்கள் ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், செவி வழிச் செய்திகள் என்று கடந்து வரவில்லை. இவை நமது அனுஷ்டானங்களில் இடம் பெற்றுள்ளன. வேதம், சாஸ்திரம், புராணங்களில் இது இடம் பெற்றுள்ளன.
இதனை முறைப்படியான சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் ஆகிய வற்றை பின்பற்றி உரிய வகையில் அனைவரும் இந்த தர்மத்தில் கூறியுள்ளதைப் பின்பற்ற வேண்டும். நம் நாட்டில் உள்ள புண்ணிய ஸ்தலங்களின் புராணங்களை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்புகளை, அந்த ஸ்தலங்களின் சிறப்புகளை அதில் தெரிவிக்கப்படும் தகவல்களில் உள்ள சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நாம் அடைய வேண்டிய லட்சியம், உயர்வு குறித்தும் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஹிந்து சமயம் என்பது அறம்,பொருள், இன்பம், வீடுபேறு என்பதை அடிப்படையாகக் கொண்டது. நாம் எப்படிப்பட்ட குணம் கொண்டுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
உணர்வு, பக்தி, ஆசாரம், தியாகம், ஆன்மிகம் ஆகியவற்றை அன்றாட வாழ்க்கை முறையில் கொண்டது ஹிந்து மதம். சத்தியம், தர்மம், நல்ல பழக்க வழக்கம், சகிப்புத்தன்மை ஆகியன அடங்கியது சனாதன தர்மம். எதனை சொல்கிறோமோ அதனை பின்பற்றும் சமயம். தவம், ஞானம், தியாகம், வேதம் எல்லாம் இணைந்தது தான் சமயம். வெறும் கட்டடம் என்பது மட்டுமே வளர்ச்சி இல்லை. மனதளவில் மனிதன் வளர்ச்சி பெற வேண்டும். தன் பலவீனத்தை விட்டு பலத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு சுவாமிகள் அருளுரையாற்றினார்.
