இந்த கைது நடவடிக்கை குறித்துப் பேசிய சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்ய என்னுடைய அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார். இது சட்டமன்ற மரபுகளுக்கும், நாடாளுமன்ற விதிமுறைகளுக்கும், முரணானது, தவறானது. உதாரணத்திற்கு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கைது செய்யப்பட்டபோது, அன்றைக்கு நாடாளுமன்ற தலைவரிடம் அனுமதி பெற்றுத்தான் அன்றைய பிரதமர் மொராஜிதேசாய் அரசு அவரை கைது செய்தது. நாடாளுமன்ற நெறிமுறைகள், பிரிட்டிஷ் “Erskine May” “மே” உடைய நெறிமுறைகளுக்கு ஒப்ப இந்திய நாடாளுமன்ற முறையும் இருக்கிறது. மரபு இந்திய நாடாளுமன்ற முறைக்கு அடிப்படையாக ஹவுலாண்ட் சத்தர் (Kowl and Shaddar) கோட்பாடுகள் படி எந்த நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ கைது செய்யப்படும்போது, குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட அவைத் தலைவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, விதிமுறைகளும் ஆகும்.
இதை மறந்துவிட்டு, தமிழ சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் துலாக்கோல் போல் நடுநிலைமையில் இல்லாமல் ஆளும் கட்சிக்குச் சாதகமாக, சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு என்னுடைய அனுமதி தேவையில்லை என்று பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. சட்டமன்ற பேரவைத் தலைவர் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், நடுநிலையோடு தனது அலுவல் பணிகளைச் செய்வதுதான் நாடாளுமன்ற முறையின் அடிப்படை கூறாகும். இதைப்போல, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்?. இனியாவது நாடாளுமன்ற நடைமுறைகளைக் கடைப்பிடித்து, “ஓர்ந்துகண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை.” என்ற வள்ளுவப்பெருமானின் வாய்மொழிக்கேற்ப, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நடுநிலையோடு செயல்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
