10 வயதில் தொடங்கிய பயணம், கமலுக்கு தங்கை, மோகன்லாலுக்கு ஜோடி; கடைசி படத்தில் கணவருடன் நடித்த இவர் யார் தெரியுமா?

திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதே மிகப்பெரிய சாதனை. ஆனால் அந்த இடத்தை நீண்ட காலம் தக்கவைத்துக் கொள்வது அதைவிட கடினம். பலர் புகழின் உச்சியை அடைந்த பிறகும் அந்த நிலையை நிலைநிறுத்த முடியாமல் போகிறது. ஆனால், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகை ஸ்ரீஜா, தனது வெற்றிகரமான திரைப்பயணத்தை உச்சத்தில் இருந்தபோதே தனது திரை பயணத்தை முடித்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையைத் தேர்வு செய்தார்.

10 வயதில் எதிர்பாராத விதமாக சினிமா அறிமுகம்

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களான ஸ்ரீதரன் மற்றும் உஷா தம்பதியரின் மகளாக பிறந்தவர் ஸ்ரீஜா. தனது 10-வது வயதில், இயக்குநர் ஜீஸி இயக்கிய ‘நிதி’ (1982) திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு தனது சகோதரருடன் சென்றிருந்தார். அப்போது அவரைக் கவனித்த இயக்குநர், சிறுமியான ஸ்ரீஜாவையும் படத்தில் நடிக்க வைத்தார். இப்படித்தான் அவரது திரைப்பயணம் எதிர்பாராத விதமாக தொடங்கியது.

பின்னர் பட்டப்படிப்பை முடித்த அவர், பெற்றோருடன் நாடகங்களில் நடித்ததோடு, தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். அதன்பிறகு இயக்குநர் சிபி மலையாளி இயக்கிய ‘முத்தாரம்குன்னு பி.ஓ.’ (1985) திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். தொடர்ந்து ‘ஒரு மேய்மாச புலரியில்’ (1987) திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.

கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லாலுடன் இணைந்து நடித்தவர்
1989-ம் ஆண்டு ஸ்ரீஜாவின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. ‘சாணக்யன்’ படத்தில் கமல்ஹாசனின் சகோதரியாகவும், ‘மழவில்காவடி’ படத்தில் ஜெயராமின் சகோதரியாகவும் நடித்தார். அதே ஆண்டில், மம்முட்டி நடித்த பிரபல சிபிஐ தொடரின் இரண்டாவது பாகமான ‘ஜாக்ரதா’ திரைப்படத்திலும் முக்கிய கேரகடரில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, 1990-ல் வெளியான ‘இந்திரஜாலம்’ திரைப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. குறிப்பாக “குஞ்சிக்கிளியே கூடேவிடே” என்ற பாடலில் மோகன்லாலுடன் இணைந்த அவரது நடிப்பும், இருவரின் திரைவேதியியல் (Chemistry) ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பின்னர் ‘டாக்டர் பசுபதி’, ‘சாம்பியன் தாமஸ்’, ‘எழுநள்ளத்து’, ‘கோஷயாத்திரா’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்தார். தமிழிலும் ‘மௌனம் சம்மதம்’, ‘சேரன் பாண்டியன்’, ‘தையல்காரன்’, ‘புருஷனை கைக்குள்ள போட்டுக்கணும்’, ‘என் ராஜாங்கம்’ போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

actor-sreeja-why-she-left-films-husband-sandhana-pandian-sevvanthi-mohanlal-3

ஒரு திரைப்படம் உருவாக்கிய காதல்

‘மௌனம் சம்மதம்’ திரைப்படத்தில் ஸ்ரீஜாவைப் பார்த்து, தொழிலதிபரும் முன்னாள் தமிழக அமைச்சரான சி.அரங்கநாயகத்தின் மகனுமான சந்தன பாண்டியன் அவர்மீது காதல் கொண்டார். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், ஸ்ரீஜாவை கதாநாயகியாக வைத்து ‘செவ்வந்தி’ (1994) என்ற திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில் சந்தன பாண்டியனே கதாநாயகனாகவும் நடித்தார். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இரு குடும்பங்களின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

‘செவ்வந்தி’யே இருவரின் கடைசி படம்

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ‘செவ்வந்தி’ திரைப்படம் ஸ்ரீஜாவுக்கும் சந்தன பாண்டியனுக்கும் கடைசி படமாக அமைந்தது. சந்தன பாண்டியன் நடித்த முதல் மற்றும் ஒரே திரைப்படமும் அதுவே. அந்தப் படம் உருவானதே இருவரையும் வாழ்க்கைத் துணைகளாக இணைப்பதற்காகவே என்ற உணர்வை அவர்களின் வாழ்க்கை ஏற்படுத்துகிறது.

actor-sreeja-why-she-left-films-husband-sandhana-pandian-sevvanthi-mohanlal-feat

ஏன் சினிமாவுக்கு திரும்பவில்லை?

திருமணத்திற்குப் பிறகு பலமுறை மீண்டும் நடிக்க வாய்ப்புகள் வந்தபோதும், ஸ்ரீஜா அவற்றை ஏற்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், “சினிமா எனக்கு மிகவும் பிடித்தது. அது எனக்குப் புகழையும், வாழ்க்கைத் துணையையும் கொடுத்தது. ஆனால், அதைவிட என் குடும்பம் எனக்கு முக்கியம். கணவரும் குழந்தைகளும் இருக்கும் இந்த வாழ்க்கையை விட அழகானது வேறு எதுவும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

குடும்பத்தைத் தேர்ந்தெடுத்த நடிகை

பல நடிகர்கள் புகழின் உச்சியில் இருக்கும் போது மேலும் உயரங்களை நோக்கிப் பயணிப்பார்கள். ஆனால், நடிகை ஸ்ரீஜா தனது வாழ்க்கையில் குடும்ப மகிழ்ச்சியையே முதன்மையாகக் கருதி, திரையுலகப் புகழைத் துறந்தார். மோகன்லால், கமல்ஹாசன், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருந்தாலும், குடும்ப வாழ்க்கையே தனது மிகப்பெரிய வெற்றி என்று கருதி வாழ்ந்து வரும் ஸ்ரீஜாவின் முடிவு, இன்றும் பலரால் பாராட்டப்படுகிறது.

Source link