புதுடில்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை பார்லி.யில் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை என்று ராஜ்ய சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை மையப்படுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் இதே கோரிக்கையை முன் வைத்து பார்லி. அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
பார்லி.யில் விவாதத்திற்கு தயார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி அளித்த பின்னரும் அதை ஏற்க மறுத்து காங்கிரஸ் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பார்லி. இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந் நிலையில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை பார்லி.யில் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை என்று ராஜ்ய சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டமாக கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது;
அவையில் நியாயமான விவாதமோ அல்லது ஆலோசனையோ அது எதுவாக இருந்தாலும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை அதை அனுமதிக்க மாட்டோம். அவர் ராஜினாமா செய்யும் வரை எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
