பிரிட்ஜ்டவுன்: ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 3-2 என, கோப்பை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளில் முடிவில் நியூசிலாந்து 3-1 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு வில் யங் (56), நிக் கெல்லி (64) நம்பிக்கை தந்தனர். ஹென்றி நிக்கோல்ஸ் (10), மார்க் சாப்மன் (11), கேப்டன் சான்ட்னர் (13) ஏமாற்றினர். டாம் லதாம் (69) அரைசதம் கடந்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 268/9 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அக்கீம் அகஸ்டே (34), ஜஸ்டின் கிரீவ்ஸ் (22), கீசி கார்டி (20), கேப்டன் ஷாய் ஹோப் (39) கைகொடுத்தனர். பின் இணைந்த ஷெர்பேன் ரூதர்போர்டு (61), ஷிம்ரன் ஹெட்மயர் (69*) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 47.3 ஓவரில் 269/8 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருதை ஹெட்மயர் வென்றார். தொடர் நாயகன் விருதை நியூசிலாந்தின் ஜேடன் லெனாக்ஸ் (14 விக்கெட்) தட்டிச் சென்றார்.
