இந்தியா-ஜிம்பாப்வே பலப்பரீட்சை * முதல் 'டி-20' மோதல் இன்று

ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் ‘டி-20’ தொடர் இன்று துவங்குகிறது. இதில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர், மீண்டும் களமிறங்குகிறார்.

ஷ்ரேயஸ், பயிற்சியாளர் காம்பிர் கூட்டணி, சமீபத்தில் 0-2 என அயர்லாந்திடம் வீழ்ந்தது. அடுத்து இங்கிலாந்து மண்ணிலும் 0-4 என தோற்றது. தொடர்ந்து 7 போட்டியில் ஒரு வெற்றி கூட பெறவில்லை.

தற்போது ஜிம்பாப்வே தொடரில், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், தற்காலிக பயிற்சியாளர் லட்சுமணுடன் இணைந்துள்ளார். இந்தக் கூட்டணி, மாற்றம் தருமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வைபவ் உறுதி

இந்திய அணியில் சாம்சன் இல்லாத நிலையில், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மூன்று போட்டியிலும் துவக்கம் தர உள்ளார். கடந்த 2024, ஜூலை 6ல் இம்மைதானத்தில் அறிமுக ‘டி-20’ல் களமிறங்கினார் அபிஷேக் சர்மா. இரண்டாவது போட்டியில் சதம் அடித்தார். இது மீண்டும் தொடரலாம். மூன்றாவது இடத்தில் இஷான் கிஷான், அடுத்து ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்குவர்.

இதனால் துணைக் கேப்டன் திலக் வர்மா 5வது இடத்திற்கு தள்ளப்படுகிறார். ஆனால் இந்த இடத்திற்கு பொருத்தமான ரிங்கு சிங், 6வது வீரராக வரலாம்.

பவுலிங் எப்படி

இந்திய அணி, ‘வேகத்தில்’ பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், யாஷ் தாகூர் என இளம் வீரர்களை நம்பி களமிறங்குகிறது. சுழலில் ரவி பிஷ்னோய் மட்டும் சற்று அனுபவ வீரராக உள்ளார்.

‘ஆல் ரவுண்டர்களாக’ ஹர்ஷ் துபே, ஷிவம் துபே, சுயான்ஷ் என மூவரில் இருவர் தேர்வு செய்யப்படலாம். சூழலுக்கு ஏற்ப, மூன்று வீரர்களும் தேர்வு செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

அனுபவ கேப்டன்

ஜிம்பாப்வே அணிக்கு அனுபவ கேப்டன் சிக்கந்தர் ராசா பலம் சேர்க்கிறார். பென் கர்ரான், பென்னெட், மசகட்சா பேட்டிங்கில் கைகொடுக்க உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் முசரபானி, ரிச்சர்டு நிகரவா என உயரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி தருவது உறுதி.

சமீபத்தில் சொந்தமணணில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களை கைப்பற்றியது, ‘டி-20’ தொடரில் சிறப்பாக செயல்பட்டது போன்றவை, இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே நம்பிக்கையுடன் உதவும்

மறக்க முடியாத மைதானம்

கடந்த பிப்.,ல் நடந்த ஜூனியர் உலக கோப்பை பைனலில், வைபவ் இம்மைதானத்தில் 80 பந்தில் 175 ரன் விளாசி, இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்தார். தற்போது மீண்டும் இங்கு விளையாட உள்ளார். இதுகுறித்து வைபவ் கூறியது:

ஹராரே மைதானம் மறக்க முடியாத நினைவுகளை தந்துள்ளது. நான்கு மாதத்திற்கு முன், இங்கு தான் உலக கோப்பை (19 வயது) வென்றோம். இம்முறை சீனியர் அணிக்காக விளையாடுவது சிறப்பு. உலக கோப்பை தொடரில் இங்கு கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி, வரும் தொடரில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்.

மற்றபடி சமீபத்தில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். கிரிக்கெட்டில் இதுவும் ஒரு பகுதி தான் என்றாலும், தொடர்ந்து அணிக்காக 100 சதவீத திறமை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆடுகளம் எப்படி

ஹராரே மைதானத்தில் பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும். இது இந்திய வீரர்களுக்கு தொல்லையாக அமையலாம்.

Source link