நீதிமன்றங்களை விரிவுபடுத்த நடவடிக்கை: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

சென்னை: ”வழக்குகளின் தேக்கத்தை குறைக்க, மாநிலம் முழுதும் உள்ள நீதிமன்றங்களை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு, அரசு முன்னுரிமை அளிக்கும்,” என, தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கமான, ‘மெட்ராஸ் பார் அசோசியேஷன்’ சார்பில், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.விழாவில், சங்கத் தலைவர் வி.ஆர்.கமலநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில், அமைச்சர் பேசியதாவது:

நுாற்றாண்டுக்கு மேல் பழமையான, ‘மெட்ராஸ் பார் அசோசியேஷன்’ பல புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், நீதிபதிகளை பார்த்த இடம். இந்த இடத்திற்கு, என்னை அழைத்ததற்கு பெருமைப்படுகிறேன். சட்டத்துறை, நீதிமன்ற நிர்வாகத்தில் சிக்கல்கள் உள்ளன. அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீதிமன்றங்களை விரிவுபடுத்த வேண்டும். வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. தமிழக முதல்வர் விஜய், நீதிமன்றங்களை எவ்வளவு விரிவுப்படுத்த முடியுமோ, அவ்வளவு விரிவுப்படுத்துங்கள் என, அறிவுறுத்தி உள்ளார்.

அதாவது, 200 வழக்குகளுக்கு ஒரு நீதிமன்றம் என்ற வகையில், முதல் முன்னுரிமை நீதிமன்றங்களை விரிவுப்படுத்துவதற்கு வழங்கப்படும். இதன் வாயிலாக, வழக்குகள் தேக்கம் குறையும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘பார் அசோசியேஷன்’ செயலர் போத்திராஜ், த.வெ.க., வழக்கறிஞர்கள் அணி செயலர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்து, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறைக்கு சென்ற அமைச்சர் நிர்மல் குமார், அங்கு பத்திரிகையாளரிடம் உரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Source link