கிட்டத்தட்ட 30 வருடங்களாக தனது படங்கள் மூலமாக ரசிகர்களை கவரந்த சூர்யா இன்று பிறந்தநாள் காண்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவர் நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழு, அவரது 48வது பட இயக்குநர் த.செ.ஞானவேல் உள்ளிட்டோரும் சிறப்பு போஸ்டர் மற்றும் வாழ்த்து பதிவு என வெளியிட்டுள்ளனர்.
மேலும் அவரது நற்பணி இயக்க சார்பில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரத்த தானமும் நடைபெற்றது. இந்த நிலையில் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடி வருவதால் இந்த பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தில் கரப்பான் ஜனதா கட்சியின் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்கும் நோக்கில் காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு, தடியடி தாக்குதல், குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இளைஞர்களுக்கு ஆதரவாகவும் காவல் துறையின் வன்முறைக்கு எதிராகவும் பல்வேறு திரை பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
