ஜந்தர் மந்தர் போராட்டம்: இளைஞர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டியது ஏன்?

மத்திய டெல்லி பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party- CJP) சார்பில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். காவல்துறையினரின் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டு வீச்சையும் மீறி, மூன்று நாட்களுக்குப் பிறகும் அவர்களின் போராட்டம் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அரசு நடத்தி வரும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராளி சோனம் வாங்சுக், குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், செவ்வாய்க்கிழமை சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் பிற மூத்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இந்த தர்ணாவில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தீவிரமான சர்ச்சை குறித்து செவ்வாய்க்கிழமை தனது முதல் கருத்தைப் பதிவு செய்த பிரதமர் மோடி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில், இளைஞர்களின் எதிர்காலத்தோடு யாரும் விளையாட முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வினாத்தாள் கசிவு போன்ற “கடுமையான குற்றத்தில்” ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார். மேலும், அரசானது ஒரு சமரச முயற்சியாக சி.ஜே.பி தலைவர்கள் மற்றும் வாங்சுக்கை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைக்கு முயற்சித்துள்ளது. பல நாட்களுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய இந்த நடவடிக்கையை அரசு ஏன் தாமதமாக எடுத்தது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

ஜந்தர் மந்தர் போராட்டம், நாட்டின் தற்போதைய கோளாறான தேர்வு மற்றும் கல்வி முறை இளைஞர்களின் மனதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் இளைஞர்களின் உணர்வுகளை புறக்கணித்தால் அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பது இப்போது மிக தெளிவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நெருங்கும் நிலையில் மோடி அரசு இருந்தாலும், இளைஞர்களும் பன்முகத்தன்மையும் லட்சியங்களும் நிறைந்த ஒரு நாட்டில் வீதிவழிப் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது.

கடந்த காலத்தில் நடந்த போராட்டங்களில் இருந்து சி.ஜே.பி-யின் போராட்டங்கள் வித்தியாசமானதாகத் தோன்றுகிறது. முதலாவதாக, சமீபத்திய ஆண்டுகளில் பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்திய ஓராண்டு கால போராட்டம் அல்லது முஸ்லிம் சமூகத்தை மையமாகக் கொண்டு நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான (CAA-NRC) போராட்டங்கள் போல, இந்த போராட்டம் சமூகத்தின் ஏதேனும் ஒரு பிரிவினரின் பிரச்சனையை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த் நீதிமன்றத்தில் “கரப்பான் பூச்சி” (Cockroach) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்குப் பதிலாக, அபிஜித் திப்கே என்பவரால் ஒரு கேலிச்சித்திர இளைஞர் கூட்டமைப்பாக சி.ஜே.பி தொடங்கப்பட்டது.

சுதந்தரத்திற்குப் பிந்தைய இந்திய இயக்கங்களான 1973-74 இல் “முழுமையான புரட்சிக்காக” நடந்த ஜே.பி இயக்கம், 1980களின் தொடக்கத்தில் பங்களாதேஷ் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான அசாம் இயக்கம் அல்லது 2011 இல் லேக்பால் மற்றும் பொதுப் பொறுப்புடைமைக்காக அன்னா ஹசாரே நடத்திய இயக்கம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது சி.ஜே.பி வித்தியாசமானது. அந்த இயக்கங்கள் அனைத்தும் ஒரு தெளிவான தலைமைத்துவத்தைக் கொண்டு மக்கள் போராட்டத்தை வழிநடத்தின, மேலும் அவை ஒவ்வொன்றும் இறுதியில் ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்து அதிகாரத்திற்கும் வந்தன. ஆனால் சி.ஜே.பி என்பது இந்த சமூக ஊடக யுகத்தில் உருவான ஒரு இணையதள நிகழ்வாகும். தற்போது அது ஒரு களப் போராட்ட அமைப்பாக மாற முயல்கிறது, அது ஒரு கடினமான சவாலாக இருக்கலாம். நீட்  அல்லது ஜே.இ.இ.- ஐஐடி தேர்வெழுதும் சில ஆயிரம் பேரை மட்டும் இந்த போராட்டம் சென்றடையவில்லை. கணினியால்/முறையால் புறக்கணிக்கப்பட்டதாக உணரும் பல கோடி பேரின் குரலாகவே ஜந்தர் மந்தர் போராட்டம் எதிரொலித்துள்ளது.

நாடாளுமன்ற பேரணியின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டால் மேலும் பல தகவல்கள் வெளிவரும். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தியது, காவல்துறையின் கொடூரத்தை ஒவ்வொரு நடுத்தர வர்க்க வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்த்துள்ளது. “என் மகள் அங்கே இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று பல பெற்றோர்கள் கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது.

வாங்சுக் காரணி

ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி நடத்தி வரும் ஒரு மாத கால போராட்டத்தில் இரண்டு முக்கிய திருப்புமுனைகள் ஏற்பட்டன. ஜூன் 28 அன்று சோனம் வாங்சுக் இதில் இணைந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது இந்த இயக்கத்திற்கு ஒரு தீவிரத்தன்மையையும் கண்ணியத்தையும் அளித்தது. அதற்கு முன், சி.ஜே.பி தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் 2.2 கோடி இணையதள பின்பற்றுபவர்களைப் பெற்றிருந்த போதிலும், களத்தில் ஆதரவைத் திரட்ட திப்கே எடுத்த முயற்சிகளுக்கு பல்வேறு நகரங்களில் சுமாரான வரவேற்பே கிடைத்தது.

ஆரம்பத்தில் வாங்சுக்கின் உண்ணாவிரதம் பெரிய கூட்டத்தை ஈர்க்கவில்லை. ஜூலை 18 அன்று (அவரது 21வது நாள் உண்ணாவிரதத்தின் போது) சீருடை அணியாத காவல்துறையினர் வெள்ளை திரைகளுக்குப் பின்னால் அவரை மறைத்து சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற பிறகே, போராட்டக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 20 பேரணியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கே திரண்டனர்.

அரசியல் ஸ்தம்பித்திருந்த ஒரு சூழலில், தார்மீக பலத்திற்குப் பதிலாக அதிகார பலம் மட்டுமே பதிலளிக்கும் ஒரு காலத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்து புதிய ஆற்றலை புகுத்தியதில் மட்டுமே வாங்சுக்கின் முக்கியத்துவம் அடங்கவில்லை. அவர் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட போது அது இளைஞர்களின் மனதை ஆழமாகத் தொட்டது.

இந்தியாவின் எல்லைப் பகுதியிலும் (லடாக்) ஜனநாயக அமைப்பில் நாட்டின் மையப்பகுதியோடு உரையாட முடியும் என்பதை இந்த கல்வியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வாங்சுக் நிரூபித்துள்ளார். அவர் நாட்டின் தலைநகரில் உண்ணாவிரதம் இருந்து, எதிராளிகளை வசைபாடாமல், தமக்குத்தானே துன்பத்தை ஏற்படுத்திக்கொண்டு நாட்டின் கல்விமுறையை சீரமைக்கக் கோரினார்; இதன்மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கவலைகளுக்குக் குரல் கொடுத்தார்.

அரசின் நகர்வும் காங்கிரஸ் தள்ளுதலும்

உயர் பாதுகாப்பு மண்டலமான பிரதமரின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா நடத்த அனுமதித்ததன் மூலம், சி.ஜே.பி போராட்டம் மற்றும் காவல்துறை தடியடி செய்திகளிலிருந்து கவனத்தை திருப்ப அரசு முயன்றிருக்கலாம். தற்போதைக்கு அதில் அரசு வெற்றியும் பெற்றிருக்கலாம்.

பவன் கேரா போன்ற தனிப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஜந்தர் மந்தர் சென்றபோதிலும், ராகுல் காந்தி நேரில் செல்லவில்லை. ராகுல் காந்தியும் “சத்ரோன் கி கூஞ்ச்” என்ற பெயரில் இளைஞர்களை சென்றடையும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இளைஞர்களின் ஆதரவை CJP தட்டிச்செல்வதை அரசு விரும்பாமல் இருக்கலாம்.

இருப்பினும், நீண்ட காலத்தில், ஆளும் அரசுக்கு எதிரான கோஷம் அதிகரித்தால், முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ்தான் லாபமடையும். அரசு எந்த அளவுக்கு சேதக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதைப் பொறுத்தே இனி அனைத்தும் அமையும். அரசு இப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறது, ஆனால் கேள்வி என்னவென்றால்: இது மட்டுமே போதுமானதா, அல்லது சி.ஜே.பி, வாங்சுக், முதன்மை அரசியல் கட்சிகள் மற்றும் வல்லுநர்களுடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து தொடர் விவாதங்களை நடத்துவது தீர்வைத் தருமா?

போராட்டக்காரர்களை அரசு ஏன் சரியான நேரத்தில் தொடர்பு கொள்ளவில்லை என்ற கேள்வியும் எஞ்சியுள்ளது. முன்னரே ஜந்தர் மந்தருக்கு ஒரு தூதரை அனுப்பி வாங்சுக் மற்றும் திப்கேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் இந்த சூழ்நிலையை சுமுகமாக முடித்திருக்கலாம்.

ஒரு “வலிமையான” அரசு “அழுத்தத்திற்கு” பணிந்து செயல்படக்கூடாது, இல்லையெனில் அது பலவீனமாகிவிடும் என்ற ஒரு கருத்து அரசு வட்டாரத்தில் உள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மாநில மற்றும் மத்திய அளவில் பல மூத்த நிர்வாகிகள் வரிசையாக ராஜினாமா செய்ததையும், எதிர்க்கட்சிகள் அதை சாதகமாக பயன்படுத்தியதையும் பலர் உதாரணமாக சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு பெரிய நாட்டை ஆள்வதற்கு தேவைப்பட்டால் கண்டிப்புடன் இருக்கும் திறன் அரசுக்கு இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாட்டின் இளைஞர்கள் தங்களுக்கு “பாதிப்பு” ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் கவலைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டும் போது, அவர்களுக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய ஒரு அரசு பிடிவாதம் காட்டலாமா? இறுதியாகப் பார்த்தால், கண்டிப்பிற்கும் அகந்தைக்கும் இடையே மிக மெல்லிய கோடு மட்டுமே உள்ளது.

Source link