ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.80: ஒரே மாதத்தில் அரிசி விலை கடும் உயர்வு

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்துள்ளதன் காரணமாக, தமிழகத்தில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக மக்களின் அன்றாட உணவுகளான சாதம், பிரியாணி, ஃபிரைடு ரைஸ், இட்லி, தோசை, புட்டு ஆகியவை அரிசியைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இதுமட்டுமன்றி அதிரசம், முறுக்கு, கொழுக்கட்டை, பணியாரம் போன்ற பாரம்பரிய பலகாரங்கள் செய்வதற்கும் அரிசியே முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் அரிசியின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் கிலோ ரூ.65-க்கு விற்கப்பட்ட பொன்னி அரிசியின் விலை தற்போது ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, கிலோ ரூ.55-க்கு விற்பனையான பாபட்லா மற்றும் ஆர்.என்.ஆர் ரக அரிசிகள் ரூ.70 ஆகவும், ரூ.120-க்கு விற்கப்பட்ட சீரகச் சம்பா அரிசி ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வாலும் வரத்துக் குறைவாலும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் அரிசி தேவையை பெரும்பான்மையாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. தமிழகத்தில் விளையும் அரிசி பெரும்பாலும் பொது விநியோகத் திட்டத்திற்கே (ரேஷன்) சரியாக இருப்பதால், வெளிச்சந்தையில் மிகக் குறைந்த அளவே விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் பருவமழை பொய்த்தது மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது ஆகியவற்றின் காரணமாக ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அரிசி வியாபாரி பாலசண்முகம் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அரிசி கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், 25 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.375 வரையிலும் விலை உயர்ந்துள்ளது.

அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் நெல்-அரிசி வியாபாரிகள் சங்கத்தின் கௌரவத் தலைவர் ஸ்ரீராம் மணி தெரிவிக்கையில், கடந்த ஆண்டு தமிழகத்திலும் பருவமழை சரியாகப் பெய்யாததால் நெல் விளைச்சல் பெருமளவில் சரிந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். முன்நாட்களில் 100 மூட்டைகள் அறுவடை செய்த விவசாயிகள், தற்போது 20 மூட்டைகள் மட்டுமே விளைவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.1,700-க்குக் கிடைத்த ஒரு மூட்டை நெல், தற்போது ஏற்பட்ட தட்டுப்பாட்டினால் ரூ.2,200 முதல் ரூ.2,400 வரை உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வால் அரிசியின் விலையும் இயல்பாகவே அதிகரித்துள்ளதாகவும், வரும் அடுத்த மாதத்தில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Source link