மலையாள சினிமாவில் பெண்களின் அழகையும், உணர்வுகளையும் மிக இயல்பாகவும் கவித்துவமாகவும் திரையில் பதிவு செய்த இயக்குநர்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர்கள் பரதன் மற்றும் பத்மராஜன். கதாநாயகிகளை மிகைப்படுத்தாமல், அவர்களின் இயல்பான பெண்மையையே திரையில் அழகாக வெளிப்படுத்திய இந்த இரு இயக்குநர்களின் படைப்புகள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
அந்த வகையில், இந்த இரு இயக்குநர்களின் பார்வையிலும் கதாநாயகியாக மிளிர்ந்த அரிய நடிகை சுபர்ணா ஆனந்த். வெறும் ஐந்து மலையாளப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவற்றின் மூலம் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றார். குறிப்பாக இவர் அறிமுகமான ‘வைசாலி’ (1988) மற்றும் ‘ஞான் கந்தர்வன்’ (1991) திரைப்படங்களில் அவர் வெளிப்படுத்திய அழகும் நடிப்பும், இன்றும் மலையாள ரசிகர்களின் நினைவில் நிலைத்து நிற்கின்றன.
‘வைசாலி’ மாற்றிய வாழ்க்கை
மும்பையைச் சேர்ந்த சுபர்ணா ஆனந்த், குழந்தை நட்சத்திரமாக இந்தி திரைப்படங்களில் தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர் அனில் கபூர், மாதுரி தீட்சித் நடித்த ‘தேஜாப்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதே சமயத்தில், எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் பரதன் இயக்கிய ‘வைசாலி’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
மகாபாரதக் கதையை தழுவி உருவான இந்தப் படத்தில், மழை வரச் செய்வதற்காக முனிவர் ரிஷ்யசிருங்கரை கவரும் தேவதாசிப் பெண்ணாக சுபர்ணா நடித்திருந்தார். அவரது அழகும், நடிப்பும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால், படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நிஜ வாழ்க்கையிலும் மலர்ந்த திரை காதல்
‘வைசாலி’ படத்தில் ரிஷ்யசிருங்கராக நடித்தவர் சஞ்சய் மித்ரா. இருவருக்கும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. திரைப்படத்தில் காதல் சோகமாக முடிந்தாலும், நிஜ வாழ்க்கையில் சுபர்ணாவும் சஞ்சய் மித்ராவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தாலும், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். பின்னர் இருவரும் தனித்தனியாக மறுமணம் செய்து கொண்டனர்.
குறுகிய சினிமா பயணம்
‘வைசாலி’க்குப் பிறகு மம்முட்டியின் ‘உத்தரம்’, ‘நகரங்களில் சென்று ராப்பார்க்கம்’, பத்மராஜனின் ‘ஞான் கந்தர்வன்’ உள்ளிட்ட பல முக்கிய மலையாளப் படங்களில் சுபர்ணா நடித்தார். அதேபோல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி மொழித் திரைப்படங்களிலும் தோன்றினார். தமிழில் ‘திராவிடன்’, தெலுங்கில் ‘அசோக சக்கரவர்த்தி’, கன்னடத்தில் ‘தாதா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் பெற்ற வரவேற்பை வேறு எந்த மொழியிலும் பெற முடியவில்லை. 1997-ஆம் ஆண்டு இயக்குநர் பாசு பட்டாச்சார்யா இயக்கிய ‘ஆஸ்தா: இன் த பிரிசன் ஆஃப் ஸ்பிரிங்’ திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து முழுமையாக விலகினார்.
பிரிந்த பிறகும் தொடர்ந்த நட்பு
விவாகரத்திற்குப் பிறகும் சுபர்ணா ஆனந்த் மற்றும் சஞ்சய் மித்ரா நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் இணைந்து ஒரு மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். அப்போது சுபர்ணா, “நாங்கள் ஒருபோதும் சண்டையிடவில்லை. ஒருவர்மீதும் மற்றொருவருக்கு வெறுப்பு இல்லை. இன்னும் அன்பும் மரியாதையும் இருக்கிறது. நமக்கு பிடித்தவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது போலத்தான் எங்களுடைய உறவும் இருக்கிறது,” என்று மனம் திறந்து பேசியிருந்தார்.
மலையாள சினிமாவை விட்டு விலகிய காரணம்
2024-ஆம் ஆண்டு வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு பேசிய சுபர்ணா ஆனந்த், மலையாள திரைப்படத் துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே சினிமாவை விட்டு விலக காரணமாக அமைந்ததாக தெரிவித்தார். அவர் கூறுகையில், “காஸ்டிங் கவுச் என்பது புதிய விஷயம் அல்ல. அது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நான் மலையாள சினிமாவில் நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியாற்றினேன். ஆனால், அங்கிருந்த அழுத்தங்களால் அந்தத் துறையை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்று வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.
இன்றும் மறக்க முடியாத முகம்
சினிமாவில் சுபர்ணா ஆனந்தின் பயணம் மிகக் குறுகியதாக இருந்தாலும், ‘வைசாலி’ மற்றும் ‘ஞான் கந்தர்வன்’ போன்ற திரைப்படங்களில் அவர் விட்டுச் சென்ற தாக்கம் இன்னும் மங்கவில்லை. மலையாள ரசிகர்களின் மனதில் இன்றளவும் “தேவதை போன்ற அழகின் உருவம்” என்ற அடையாளத்துடன் நினைவுகூரப்படும் நடிகைகளில் சுபர்ணா ஆனந்த் முக்கிய இடம் பிடித்திருக்கிறார்.
