நீட் தேர்வுக்கு எதிராக நீலம் மாணவர் இயக்கம் போராட்டம்; இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் பங்கேற்பு

நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவி வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் சமுதாயம் கொதித்தெழுந்துள்ளது. டெல்லி முதல் தமிழகம் வரை போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாணவர்களின் நீதிக்கான இந்த அறப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் உள்ளிட்ட தமிழ் திரைத்துறையினர் நேரடியாகக் களமிறங்கியுள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறி, கரப்பன் பூச்சி மக்கள் கட்சி (சி.ஜே.பி), இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எஃப்.ஐ) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை நடத்திய அடக்குமுறையில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகத்திலும் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட முதன்மை நகரங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

சென்னை எழும்பூரில் திரண்ட திரைப்படை:

மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலையும், நீட் முறைகேடுகளையும் கண்டித்து, பா.ரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ மற்றும் ‘நீலம் மாணவர் இயக்கம்’ இணைந்து “கல்வி நீதிக்காக ஒன்றிணைவோம்” எனும் முழக்கத்துடன் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரம்மாண்ட போராட்டத்தை ஒருங்கிணைத்தது.

இப்போராட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாடகர் அறிவு, நடிகர் சத்யராஜ், நடிகை ரேவதி உள்ளிட்ட திரையுலகின் முன்னணிப் பிரபலங்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

முக்கியக் கோரிக்கைகள்:

நீட் தேர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலான பழைய சேர்க்கை முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அடக்குமுறையைக் கைவிடுக: அமைதியான வழியில் போராடும் இளைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் அறிவு போன்ற கலைஞர்கள் மீது ஏவப்படும் பொய் வழக்குகளையும் கைது நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.

கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டும்: கல்வித் துறை முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்; மேலும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

“இது ஒரு சில தனிநபர்களின் பிரச்சனை அல்ல; நமது வருங்காலத் தலைமுறையின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் போராட்டம்” எனக் குரல் எழுப்பியுள்ள திரைப்பிரபலங்கள், சமூக நீதியை விரும்பும் அனைவரும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

“நீட் தேர்வின் மூலமாக நம்மிடம் இருந்து மருத்துவக் கல்வியை முழுமையாக எடுக்கப் பார்க்கிறார்கள். மீண்டும் நம்மை அவர்களிடம் கைகட்டி நிற்க வைக்க முயற்சிக்கிறார்கள்” என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.

Source link