போலீஸ் நிலையங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பராமரிப்பு நிதி குறித்து சுப்ரீம்கோர்ட் கேள்வி

– நமது சிறப்பு நிருபர் –

நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. அதே வேளையில், இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு முடிவுக்கு வருவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் செயல்படாதது, லாக் – குப் மரணங்கள் குறித்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. இப்பிரச்னை தொடர்பாக, வழக்கில் நீதிமன்றத்தின் உதவியாளராக செயல்படும் வழக்கறிஞர் சித்தார்த் தாவே, அறிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதில் சித்தார்த் தாவே அறிக்கையை ஆய்வு செய்த பின், நீதிபதிகள் கூறியதாவது:கடந்த 2020-ம் ஆண்டு, பரம்பீர் சிங் சைனி வழக்கில், அனைத்துக் போலீஸ் நிலையங்கள், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ., போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களிலும், நைட் விஷன் மற்றும் ஆடியோ பதிவு வசதியுடன் கூடிய, ‘சிசிடிவி’களை அமைப்பதை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடு முழுவதும் போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ அமைக்கும் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வழக்கறிஞர் சித்தார்த் தாவேவின் முயற்சி பாராட்டுக்குரியது. அதே நேரம், இத்திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு முடிவுக்கு வருவதால், ‘சிசிடிவி’ கேமராக்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்கான மாநில அரசிடம் போதுமான நிதி வசதிகள் இல்லாதது கவலை அளிக்கிறது.

அசாம் மாநிலத்தில், போலீஸ் நிலையங்களில் ‘சிசிடிவி’ பொருத்துவதற்கான மத்திய அரசின் நிதித் திட்டம், வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஹிமாச்சல பிரதேசம் மட்டுமே, நிதி பெற்று, பணிகளை விரைவாக முடித்துள்ளது.

‘சிசிடிவி’ கேமராக்களை நிறுவுவதற்கான திட்டத்தின் நிதியை, பராமரிப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடியாது. இதனால், நீண்ட கால அடிப்படையில் கேமராக்களைத் தொடர்ந்து இயங்க வைப்பதில், மாநிலங்களுக்குப் பின்னடைவு ஏற்படக்கூடும்.

எனவே, ‘சிசிடிவி’ நிதித் திட்டத்தை நீட்டிப்பது மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கான வழிகாட்டுதல்கள் தொடர்பாக, அமிக்கஸ் கியூரியின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசிடம், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Source link