“இந்தியாவின் ஒற்றுமையை கலைக்க பார்க்கிறார்கள்” – ரேவதி

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் மீதும் மாணவர்கள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நீட்டுக்கு எதிராகவும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இவர்களோடு நடிகை ஆண்ட்ரியாவும் கலந்து கொண்டார். 

நிகழ்வில் நடிகை ரேவது கலந்து கொண்டு பேசுகையில், “இன்று சோனம் வாங்சுக்கின் 26வது நாள் உண்ணாவிரதப் போராட்டம். இந்த காலத்திலும் இப்படி ஒரு போராட்டம் செய்து சாதிக்க வேண்டும் என்று நம் நாட்டின் நிலைமை இருக்கிறது. நீட் தேர்வு தேவையா இல்லையா அல்லது அதில் இருக்கும் குளறுபடிகளைச் சரி செய்தால் போதுமா என்பது பற்றி பேச எனக்கு போதிய புரிதல் கிடையாது. ஏனென்றால் அது குறித்து இன்னும் நான் முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் நீட் வினாத்தாள் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

கடந்த 20ஆம் தேதியில் இருந்து நடந்த சம்பவங்களை பார்க்கும் போது என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கைகூப்பி முட்டி போட்டு எங்களை அடிக்காதீர்கள் என கெஞ்சுகிறார்கள். நீட் தேர்வால் என் கனவு போய்விடும் என கதறுகிறார்கள். காலில் ரத்தம் வடிந்து கொண்டிருக்கும் போது வீட்டில் எதுவுமே நடக்கவில்லை என அம்மாவிடம் ஒருவன் சொல்கிறான். ஒரு டிஜிபி ஒரு பொன்னுடைய கண்ணத்தில் பலார் என அறைகிறார். அந்த வீடியோக்களையெல்லாம் பார்த்தலிருந்து தூக்கம் வரவில்லை, என்ன பண்ணுவதென்றே தெரியாமல் தமிழ்நாட்டில் எதாவது ஆர்பாட்டம் நடக்கிறதா என்பதை தெரிந்து நான் மனசு விட்டு பேச வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன். 

இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு பலரும் சாப்பாடு அள்ளி கொடுக்கிறார்கள், தங்குவதற்கு இடம் தருகிறார்கள். இதுதான் நம்முடைய இந்திய நாடு. அந்த ஒற்றுமையை கலைக்க நிறைய பேர் முயற்சிக்கிறார்கள். அதுதான் கஷ்டமாக இருக்கிறது. இன்னொரு வீடியோ பார்த்தேன். ஒரு 16 வயது பையனை போலீஸ் அடிக்கும் போது, என்னுடைய உரிமைகள் பற்றி எனக்கு தெரியும், எனக்கு பேச உரிமை இருக்கிறது, எதற்கு என்னை தடுத்து நிறுத்துகிறீர்கள் என்கிறான். அவன் அவனுடைய எதிர்காலத்திற்காக இன்றைக்கு போராடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அந்த போராட்டத்துக்கான காரணம் கல்வி. இது போல நல்லபடியாக நமக்கு தெரிந்த விஷயங்களை உள்வாங்கி பேசும் ஜென் சி-களுக்கு ஹாட்ஸ் ஆஃப். எங்கள் காலத்தில் பேசப் பயந்து கொண்டு வெளிவராமல் இருந்து விட்டோம்.  ஆனால் இப்போதைய இளைஞர்கள்அப்படி இல்லை.   

டாக்டர் அம்பேத்கர் அன்றைய காலகட்டத்திலே தொழிலாளர் சட்டங்கள், மகப்பேறு விடுப்பு, ரிசர்வ் வங்கி கட்டமைப்பு எனப் பல விஷயங்களை எழுதியுள்ளார். இதற்கெல்லாம் காரணம் கல்வி. அதை அறிந்து இந்த தலைமுறை இளைஞர்கள் போராடுகிறார்கள், எங்கள் தலைமுறையினர் அப்படி செய்யவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். அதனால் மாணவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அதே சமயம் கல்வியையும் கேள்வி கேட்பதையும் மாணவர்கள் விடக்கூடாது” என்றார்.  

Source link