–டில்லி சிறப்பு நிருபர்–
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவர் ராஜா ரகுவன்ஷியைத் திட்டமிட்டுக் கொலை செய்த வழக்கில் கைதான மனைவி சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், மூன்று வாரங்களுக்குள் சரண் அடையும்படி உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம், வடகிழக்கு மாநிலமான மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற ராஜா ரகுவன்ஷி என்பவர், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்டார். இந்த வழக்கில் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், கைது குறிப்பாணையில் கொலை வழக்குக்கான, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 103(1)க்கு பதிலாகத் தவறுதலாகச் பிரிவு 403(1) எனக் குறிப்பிடப்பட்டது. இதைக் காரணம் காட்டி, கைதுக்கான முறையான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி சோனம் ரகுவன்ஷிக்குக் விசாரணை நீதிமன்றமும், மேகாலயா உயர் நீதிமன்றமும் ஜாமின் வழங்கின.
இதை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.பி.வராலே அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கைதுக்கான காரணங்களே தெரிவிக்கப்படாததற்கும், குறிப்பாணையில் சிறு எழுத்துப் பிழை இருப்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. சோனம் கைது செய்யப்பட்டதற்கான அனைத்துப் பத்திரங்களையும் ஏற்றுக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே, தொழில்நுட்பக் பிழையைக் காரணம் காட்டி ஜாமின் வழங்கியது தவறானது.
இது மிகக் கொடூரமான மற்றும் தீவிரமான கொலை வழக்கு. சாட்சிகள் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், சோனம் ரகுவன்ஷி தொடர்ந்து வெளியில் இருப்பது வழக்கின் நியாயமான விசாரணையைப் பாதிக்கும். எனவே, சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படுகிறது.
அவர் இன்னும் மூன்று வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடிவடையவில்லை என்றால், அவர் மீண்டும் புதிய ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
