‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ விமானிகளுக்கு நடுவானில் உடல்நல பாதிப்பு

ஹைதராபாத்: ஹைதராபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு நடுவானில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்த விசாரணையை ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனம் தொடங்கியுள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டனுக்கு ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘பி.ஏ., – 276’ என்ற விமானம் சமீபத்தில் சென்றது. புறப்பட்ட சில மணி நேரத்துக்கு பின், 30,000 அடி உயரத்தில் விமானம் பறந்த போது, விமானிகளில் ஒருவரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

விமானத்தை இயக்க முடியாத நிலைக்கு சென்ற அவருக்கு, நடுவானிலேயே அவசரமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், இரு விமானிகளும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். உடல்நிலை மோசம் அடைந்தபோதும் இருவரும் விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கினர். லண்டனில் மூவருக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

விமானம் புறப்படுவதற்கு முன்பாக, ஹைதராபாதில் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில், மூன்று விமானிகளும் காலை உணவு சாப்பிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வெளிநிறுவனம் ஒன்றால் வழங்கப்பட்ட பாட்டில் தண்ணீரையும் அவர்கள் அருந்தியுள்ளனர்.

இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டதை அடுத்து, விமானிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டது தொடர்பான விசாரணையை ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனம் தொடங்கியுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு தேவையான மாதிரிகளை வழங்குமாறு மூன்று விமானிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source link