நீட் விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், போராட்டங்களையும் தூண்டியுள்ளது. டெல்லியில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் போராட்டம் விரிவடைந்து வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்விற்கு எதிராகவும் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகளை உள்ளிட்டோர் கலந்து கொன்றனர்.
அந்த வகையில், நீட் தேர்வை எதிர்த்துப் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகை மஞ்சு வாரியர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “அரசியலை விடவும் மனித நேயமே எப்போதும் வெல்லும். கேள்விகள் கேட்கவும், தங்களது கவலைகளை வெளிப்படுத்தவும், முறையான உரையாடலை எதிர்பார்க்கவும் இளைஞர்களுக்கு உரிமை உண்டு. இந்திய முழுவதும் தேர்வு முறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதிக்கப்பட்ட வேண்டும். கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, பொறுப்பு கூறல் மற்றும் நியாயம் ஆகியவற்றின் மூலமே வலுப்பெறும். நமது மாணவர்களுக்கு நம்பிக்கையும் நியாயமும் நிறைந்த எதிர்காலமே தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
