இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் அனைத்து கோயில் அதிகாரிகளுக்கும் 6 முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில் : –
1. நேர்மையான நிர்வாகம் :
அனைத்து கோயில்களிலும் நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும். லஞ்சம், நிதி முறைகேடு, நிர்வாக அலட்சியம் உள்ளிட்ட எந்தவொரு தவறும் கண்டறியப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
2. கோயில் சொத்துகள் பாதுகாப்பு :
கோயில் நிலங்கள் மற்றும் சொத்துகள் மீது ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பெயர் மாற்றம் அல்லது உரிமை கோரும் முயற்சிகள் எதுவும் அனுமதிக்கப்படக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும். நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்பாக அமைச்சர் மற்றும் ஆணையரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.
3. நீதிமன்ற வழக்குகள் :
கோயில் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு வரவிருந்தால், அதன் முழு விவரங்களும் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அமைச்சர் மற்றும் ஆணையருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
4. பக்தர்களுக்கான சேவைகள் :
அனைத்து கோயில்களிலும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். நீண்ட நேரக் காத்திருப்பைத் தவிர்க்க சீரான தரிசன ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும். பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகும் நிலை ஏற்படக் கூடாது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/07/24/hrce-ramesh-2026-07-24-11-45-58.jpg)
5. தினசரி கண்காணிப்பு :
அனைத்து அதிகாரிகளும் தினசரி காலை மற்றும் மாலை கோயில்களை நேரில் ஆய்வு செய்து, நிர்வாகம், தூய்மை, பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் முக்கிய பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
6. அதிகாரிகளின் பொறுப்பு :
முறைகேடுகளைத் தடுக்கத் தவறுதல், தகவல்களை மறைத்தல் அல்லது அமைச்சர் மற்றும் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வராதது கடுமையான அலட்சியமாகக் கருதப்படும். இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி உடனடியாக கடுமையான துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
