நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் தொடங்கப்பட்ட போராட்டம், தற்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், கல்வித்துறையும் மாற்றங்களைக் கொண்டு வரும் விதமாகவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கடந்த ஒரு மாதகாலமாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடந்து வரும் போராட்டம், கடந்த 20 ஆம் தேதி முதல் நாடெங்கிலும் பரவத் தொடங்கியுள்ளது .
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை நோரா பதேஹி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “ இந்தியாவில் உள்ள மாணவர்களைக் கண்டு நான் வியந்து நிற்கிறேன். அவர்களின் துணிச்சலும், மன உறுதியும், அவர்களுக்குக் கருணையுடனும் மரியாதையுடனும் ஆதரவளிக்கத் தூண்டுகின்றன. இந்தியாவின் எதிர்காலமான நம் இளைஞர்களுக்கு ஆதரவாக, இந்த அமைப்பு செயல்படுவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்று நம்புகிறேன்.
இரவு பகலாகப் படித்து வரும் ஒவ்வொரு மானவரும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தியாகம் செய்யும் ஒவ்வொரு பெற்றோரும், பொருளாதார சிரமங்களை மீறி கல்வி அளிக்கும் ஒவ்வொரு குடும்பமும் நீதியைப் பெறத் தகுதியானவர்கள். இது அரசியல் பற்றியது அல்ல, மனித நேயம் பற்றியது. மாணவர்களின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன். இதிலிருந்து ஒரு உண்மையான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
