வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்; 47 பேர் பலி, 9 லட்சம் மக்கள் கடும் பாதிப்பு

திஸ்பூர்: அசாமில் கனமழைக்கு 47 பேர் பலியாகி உள்ளனர். 25 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 9 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேக வெடிப்பு, கனமழையால் அசாம் மாநிலம் தத்தளித்து வருகிறது. மழையின் தாக்கத்தால் பல முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தேமாஜி, திப்ரூகர், காம்ரூப் என 25 மாவட்டங்களில் 9 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 1800க்கும் அதிகமான கிராமங்கள் தத்தளித்து வருகின்றன.

மழை மற்றும் வெள்ளம் பாதிப்பால் இதுவரை 47 பேர் பலியாகி இருக்கின்றனர். 40 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை பற்றிய விவரங்கள் தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நிலைமை மோசம் அடைந்து வரும் சூழலில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடுக்கி விட மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுவினரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளனர். ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் இறங்கி இருக்கின்றனர்.

Source link