இந்தியாவின் இறையாண்மையை மீறும் சீனா: வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு

புதுடில்லி: இந்தியாவின் இறையாண்மையை சீனா மீறி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:

நிராகரிப்பு

குறிப்பிட்ட காரணங்களுக்காக ஆசியான் அமைப்பை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் இதனை நாங்கள் நிராகரித்து விட்டோம். சிந்து நதிநீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பது மற்றும் நிதியுதவி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இந்த ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும்.

ஆக்கிரமிப்பு

இறையாண்மை பிரச்னைகளை பொறுத்தவரை இந்தியாதான் உண்மையில் அவற்றை எழுப்ப வேண்டும். எழுப்பி வருகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா எந்த வகையிலும் சீனாவின் இறையாண்மையை மீறவில்லை. இந்த விஷயத்தில் இந்தியா உறுதியாக உள்ளது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளை சீனா கடந்த 1963 முதல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அங்கு இந்தியாவின் உரிமையை சீனா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீர் பகுதிகளில் சீன திட்டங்கள் நடக்கின்றன. அவற்றை நாங்கள் எதிர்க்கிறோம்.

பாகிஸ்தான் பொய் பிரசாரம்

பாகிஸ்தானில் வேண்டுமென்றே இந்தியா வெள்ளத்தை ஏற்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை பார்த்தோம். அத்தகைய குற்றச்சாட்டுகள், ஆதாரமற்றவை. உண்மைக்கு முரணானது. ஜூலை 20 முதல் 23ம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் மற்றும் செனாப் நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்தது. இதனால், அந்த நதியில், அதிக நீர் வரத்து இருந்தது. பாகிஸ்தான் வெள்ள கண்காணிப்பு அமைப்பும் 22ம் தேதி எச்சரித்துஇருந்தது. இயற்கையின் விளைவுகளால் வெள்ளப்பெருக்கு ஏ்றபட்டு உள்ளது. இந்தியா தன்னிச்சையாக எதுவும் செய்யவில்லை. பாகிஸ்தானின் செய்தி தவறானது. அந்நாட்டின் வெள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாக உள்ளது.

தாக்குதல் கூடாது

எந்த சூழ்நிலையிலும் சரக்கு கப்பல்கள் மற்றும் கடல் மாலுமிகள் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். கிழக்கு ஆசியா மாநாடு, ஆசியான் பிராந்திய கூட்டங்களில் வெளியுறவு அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ராவிடம் நமது நிலைப்பாடு தெளிவாக கூறப்பட்டுள்ளது.

கண்காணிப்பு

டில்லியில் நடக்கும் போராட்டம் குறித்து பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய் பிரசாரம் குறித்த தகவல் இல்லை. சமூக ஊடகத்தில் எந்த வகையான தகவல்கள் வருகின்றன என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை. இருப்பினும், நமது அமைப்புகள் அதனை கண்காணித்து வருகின்றன.இவ்வாறு ரன்தீர் ஜெயிஸ்வால் கூறினார்.

Source link