சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்து இயக்கம்; பயணிகள் மகிழ்ச்சி!

சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதை ரயில் பயணிகள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் ரயில் நிலையம் வழியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் செல்லும் ரயில்கள் மூலம்  தினமும் 1000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் பேருந்து நிலையம் செல்ல அதிக கட்டணம் செலவழிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. பொருளாதார வசதி குறைந்தவர்கள், முதியோர், பெண்கள் உள்ளிட்ட பலர் நடந்தே பேருந்து நிலையம் செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டது. எனவே, சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கத்தின் தொடர் முயற்சியால், கடந்த 2  நாட்களாக சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர் அதிவிரைவு, திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில், சோழன் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்களில் என ஒவ்வொரு ரயிலிலும் தினமும் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இறங்கி இந்த பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஆட்டோ கட்டணம் உள்ளிட்ட கூடுதல் செலவுகள் குறைவதாகவும், பொருளாதார ரீதியாக பெரும் உதவியாக இருப்பதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்து சேவையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட சிதம்பரம் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகளுக்கு ரயில் பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

Source link